அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்ட் டிரம்ப்
20 தை 2025 திங்கள் 16:17 | பார்வைகள் : 609
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இன் பதவியேற்பு விழா உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு ( இலங்கை நேரப்படி இரவு 10:30 மணி) அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டிடத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். மற்ற உலகளாவிய விருந்தினர்களில் சீன துணை ஜனாதிபதி, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர்கள் அடங்குவர்.
அமெரிக்க நாடாளுமன்றம் கேபிடல் ஹில்லில் 700 அமெரிக்கர்கள் முன்னிலையில் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இந்த நேரத்தில், டிரம்பின் இடது கை பைபிளில் இருக்கும். பதவியேற்பு விழாவில் ஜனாதிபதியின் மனைவியின் கையில் பைபிள் இருக்கும். அதன்படி டிரம்ப் மனைவி மெலனியா பைபிளை வைத்திருப்பார்.
பதவிப் பிரமாணத்தைத் தொடர்ந்து டிரம்பின் உரை இடம்பெறும். கடந்த முறை பதவியேற்றபோது டிரம்ப் 17 நிமிடங்கள் பேசினார்.
உறுதிமொழியைத் தொடர்ந்து கேபிடல் ஹில்லில் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.