ரூ.16,000 கோடி ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி மட்டும் செலவு 25% தான்!
21 தை 2025 செவ்வாய் 04:54 | பார்வைகள் : 389
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சிறு, குறு தொழில்களுக்காக ஒதுக்கிய 16,468 கோடி ரூபாயில், 3,993 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. இது, ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 25 சதவீதம் மட்டும்தான். சிறு, குறு தொழில்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை, இது படம் பிடித்து காட்டுவதாகவும், 'மோடி இன்ஜின்' வேகம் இழந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் துவங்கியுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டிற்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துக்கு, 22,137 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.
பின், நிதி ஒதுக்கீட்டின்போது இது, 16,468 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. ஆனாலும், இந்த நிதி, அந்த அமைச்சகத்தால் முழுமையாக செலவழிக்கப்படவில்லை.
ரூ.12,475 கோடி
கடந்த ஆண்டு நவ., வரை, வெறும் 3,993 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசால் செலவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மீதமுள்ள 12,475 கோடி ரூபாய், ஓராண்டாக கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளது.
சிறு, குறு தொழில்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், மந்தநிலை ஏற்பட்டுள்ளதையே இது காட்டுவதாக, தொழில் அமைப்புகள் விமர்சித்து உள்ளன.
பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் வேகம் இழந்து விட்டதா என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், நிலுவையில் உள்ள அந்த நிதியை, மகளிர் நடத்தும் தொழில் திட்டங்களுக்கும், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கும் மானியமாகவும், கடனுதவியாகவும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இது குறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச் செயலர் வாசுதேவன் கூறியதாவது:
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக, அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகின்றன. பல நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்கி தான் தொழிலில் ஈடுபடுகின்றன.
மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால், நிறுவனங்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றன.
பிளான் இல்லை
மத்திய பட்ஜெட்டில் நடப்பு 2024 - 25 நிதியாண்டுக்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துக்கு, 22,137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பின் இந்த நிதி, 16,468 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. அதிலும் கடந்த நவ., 12 வரை, 3,993 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசிடம் போதிய திட்டங்கள் இல்லாததே முக்கிய காரணம்.
இதுவரை இந்த நிதி ஒதுக்கீட்டில், மாநில வாரியாக செலவு செய்யப்பட்ட விபரங்களை மத்திய அரசு வெளியிடுவதுடன், மீதமுள்ள நிதியை, பெண்களால் துவங்கப்படும் தொழில்களுக்கு மானியமாகவும், பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் துவங்குவோருக்கு முதலீட்டு மானியமாகவும் வழங்க வேண்டும்.
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ஏற்றுமதி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
சிறு, நடுத்தர தொழிலில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு, 5 - 10 ஊழியர்களின் சம்பளத்தை அரசு ஏற்கும் வகையில், ஊதிய மானியம் வழங்க வேண்டும்.
அப்போது தான், பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி முறையாகவும், முழுவதுமாகவும் சிறு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.