Paristamil Navigation Paristamil advert login

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

21 தை 2025 செவ்வாய் 09:06 | பார்வைகள் : 365


2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 1200 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்த மூண்ட போர் 15 மாதங்களாக நீடித்த பிறகு இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (18 /1) இஸ்ரேலிய அமைச்சரவை போர்நிறுத்த உடன்படிக்கைக்கு அங்கீகாரம் அளித்தது. அந்த உடன்படிக்கை மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு காணப்பட்ட உடன்படிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/1) நடைமுறைக்கு வந்திருக்கிறது. அது நீடித்து நிலைக்குமானால்  மத்திய தரைக்கடல் ஓரமாக அமைந்திருக்கும் காசா பள்ளத்தாக்கு ஏங்கிக்கொண்டிருந்த நிம்மதி கிடைக்கக்கூடியதாக இருக்கும். கடந்த 15ாமாதங்களுக்கும் அதிகமான காலமாக  இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் காசா மீது இடையறாது நடத்திய குண்டுவீச்சுக்களில் 46 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் பெரும்பாலும் அந்த பள்ளத்தாக்கின் சனத்தொகை இடம்பெயர்ந்தது.

உடன்படிக்கையின் நிபந்தனைகள்

போர்நிறுத்த உடன்படிக்கை மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. முதற்கட்டத்தின் 42 நாட்களில் ஹமாஸ் 33 பணயக்கைதிகளை விடுதலை செய்யும். இஸ்ரேல் சுமார் ஆயிரம் பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கும். காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் ஓரளவு வாபஸ்பெறுவதுடன்  தினமும் மனிதாபிமான உதவிகளுடன் பள்ளத்தாக்கிற்கு சுமார் 600 லொறிகள் வருவதற்கு அனுமதிக்கப்படும். 

போர் தொடங்கிய நாள் முதல் இஸ்ரேலின் படுமோசமான குண்டு வீச்சுக்களுக்கு இரக்கான வடக்கு காசாவையும் பள்ளத்தாக்கின் சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்து முடங்கிப்போயிருக்கும் தெற்கு காசாவையும் பிரிக்கும் நெற்சாரிம் பாதையில் இருந்து இஸ்ரேரியப் பாதுகாப்பு படைகள் வாபஸ்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெற்சாறிமில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் விலகினால், இடம்பெயர்ந்த காசா மக்களில் சிலர் பள்ளத்தாக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வடக்கிற்கு வரக்கூடியதாக இருக்கும். 

ஆனால், முதற்கட்டத்தில், ராபா எல்லையில் பிலடெல்பி பாதையில்  இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும். எகிப்துடனான காசாவின்  எல்லையை இஸ்ரேல் தொடர்ந்து கண்காணிக்கும் என்பதே இதன் அர்த்தமாகும். முதலாவது கட்டத்தின் 16 வது நாள் இரண்டாவது கட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். திட்டத்தின் பிரகாரம் முதலாவது கட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், அதற்கு பின்னரும் ஹமாஸின் காவலில் 65 பணயக்கைதிகள் தொடர்ந்து இருப்பர். அத்துடன் பிலடெல்பியிலும்  காசாவின் சில இடைத்தாங்கல் (Buffer Zones) பகுதிகளிலும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்தும் நிலைகொண்டிருக்கும்.

இரண்டாவது கட்டத்தில் உயிருடன் இருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸிடம் கேட்கப்படும். இரு தரப்பினரும் மோதல்களுக்கு நிரந்தர முடிவு கட்டவேண்டும். அதற்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மூன்றாம் கட்டத்தில் அடங்கும் 

ஏன் தற்போது இருதரப்பினரும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டனர்? 

இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை எட்டு மாதங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட திட்டத்தில் இருந்து வேறுபட்டதாகும். போருக்கு நிரந்தரமான முடிவு ஒன்று கொண்டுவரப்படுமாக இருந்தால் ஒரு உடன்படிக்கைக்கு இணங்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் முன்னர் அறிவித்தது 

மே மாதம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு இஸ்ரேல் அதன் இலக்குகள் நிறைவுசெய்ப்படும் வரை இராணுவ நடவடிக்கைகளை தொடரும் என்று கூறி உடன்படிக்கையை நிராகரித்தார். ஆனால், அதற்கு பின்னரான காலப்பகுதியில் பிராந்தியத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

பிராந்தியத்தில் தனது நிலை முன்னரை விடவும் தற்போது வலுவானதாக இருக்கிறது என்று இஸ்ரேல் நம்புகிறது.லெபனானிய திரட்டல் படை அமைப்பான ஹெஸ்புல்லா இஸ்ரேலின் தாக்குதல்களில் அதன் உயர்மட்ட தலைவர்களில் பெரும்பாலானவர்களை   இழந்துவிட்டது.

யஹ்யா சின்வார் உட்பட ஹமாஸ்  இயக்கத்தின் பெரும்பாலான தலைலர்களும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளினால் கொல்லப்பட்டுவிட்டனர். கடந்த அக்டோபரில் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆகாயப் பாதுகாப்பு மற்றும் இராணுவ இலக்குவைத்து பாரிய ஆகாயமார்க்கத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.( அதற்கு பதில் தாக்குதல்களை ஈரான் இன்னமும் நடத்தவில்லை)

சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி மேற்காசியாவில் ஈரானின் எதிர்த்தாக்குதல் கூட்டணியை ( Axis of resistance) மேலும் பலவீனப்படுத்திவிட்டது. அசாத்தின் சிரியா ஈரானுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையாலான ஒரு தரைப்பாலமாக அமைந்திருந்தது. அந்த பாலம் குழப்பப்பட்டதற்கு பின்னர் மீண்டும் ஆயுதங்களை பெற்றுக்கொள்வது ஹெஸ்புல்லாவுக்கு கஷ்டமானதாக இருக்கும். இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாம் உள்நாட்டில் நெதான்யாகுவின் மதிப்பையும் வலுப்படுத்திவிட்டது.

இந்த காரணிகள் ஹமாஸுடனான ஒரு உடன்படிக்கை பற்றிய தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கு நெதான்யாகுவுக்கு ஊக்கமளித்திருக்கக்கூடியது சாத்தியம். ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்துவிடவில்லை.

பலமாதகால சண்டைக்கு பிறகு காசாவில் அதன் இலக்குகளை அடைவதற்கு இஸ்ரேல் தவறிவிட்டது. ஹமாஸை இஸ்ரேல் இல்லாமல் செய்துவிடும் என்று போரை ஆரம்பித்தபோது நெதான்யாகு கூறினார். இஸ்ரேலிய தாக்குதல்கள் ஹமாஸின் இராணுவக் கட்டமைப்புக்களை தரம் குறைத்திருக்கிறது.

ஆனால், ஹமாஸ் அதன் மூலமுதல் அவதாரமான கிளர்ச்சிப்படையாக தன்னை மீளுருவாக்கம் செய்திருக்கிறது. ஹமாஸ் போரில் இழந்த போராளிகளின் எண்ணிக்கையையும் விட கூடுதல் எண்ணிக்கையில் தனது அணிக்கு ஆட்களைத் திரட்டியிருக்கிறது என்பது அமெரிக்கவின் கணிப்பு என்று ( முன்னாள்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அந்தனி பிளிங்கென் அண்மையில் கூறியிருந்தார். 

இராணுவ வழிமுறைகளின் ஊடாக இஸ்ரேலினால் அதன் இலக்குகளை அடையமுடியாமல் போனதையடுத்து மோதலை நிறுத்தி பணயக்கைதிகளை விடுவித்துக்கொள்ளும் நடைமுறைச் சாத்தியமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு இஸ்ரேலிய தலைவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும். பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதனால் நிலைமை மாறவேண்டியதாயிற்று.

அமெரிக்கா எத்தகைய பாத்திரத்தை வகித்தது?

பைடன் நிர்வாகம் நீண்ட நாட்களாகவே போர்நிறுத்தம் ஒன்றுக்கு வற்புறுத்திக்கொண்டிருந்தது. ஆனால், காசாவில் இஸ்ரேலின் போருக்கு அது முழுமையான ஆதரவையும் வழங்கிக் கொண்டிருந்தது. வாஷிங்டன் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்ததுடன் சர்வதேச மன்றங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவையும் வழங்கியது.

இஸ்ரேல் மீது ஒரு தீர்க்கமான நெருக்குதலை பிரயோகிக்கும் தந்திரோபாயத்தை பயன்படுத்துவதற்கு பைடன் மறுத்தார். போர்நிறுத்தம் ஒன்றுக்கு பகிரங்க அழைப்பை விடுத்து தனிப்பட்ட இராஜதந்திர முயற்சிகளையும் வாஷிங்டன் எடுத்தாலும் இஸ்ரேல் போரைத் தொடர்ந்ததையே காணக்கூடியதாக இருந்தது. 

வெள்ளை மாளிகையில் இருந்து தான் வெளியேறுவதற்கு ஒருசில  நாட்கள் முன்னதாக போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டதாக பைடன் இப்போது உரிமை கோரலாம். ஆனால், ட்ரம்ப் காரணியும்  முக்கிய பாத்திரத்தை வகித்ததாக அரபு மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தான் ஜனவரி 20  பதவியேற்பதற்கு  முன்னதாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று காணப்படாவிட்டால் பெருநாசம் விழையும் என்று டொனால்ட் ட்ரம் ஏற்கெனவே கூறியிருந்தார்.ட்ரம்பின் மேற்காசிய தூதுவர் ஸ்ரீவ் விற்கோவ் கடந்தவாரம் பேச்சுவார்த்தையாளர்களையும் இஸ்ரேலிய தலைவர்களையும் சந்தித்தார்.

ஜனாதிபதி பைடனினால் ஒரு முழு வருடமும் செய்ய முடியாமல் போனதை விற்கோவினால் ஒரேயொரு சந்திப்பின் மூலமாகச் சாதிக்கக் கூடியதாக இருந்ததாக அரபு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரைம்ஸ் ஒவ் இஸ்ரேல் செய்தி வெளியிட்டது.

ட்ரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடுகளைக் கொண்டவர் என்பது நன்கு தெரிந்ததே. ஆனால், மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்தால் மேற்காசிய மற்றும் உக்ரெயின் போர்களை முடிவுக்கு கொண்டு வருவதாக தேர்தல் பிரசாரங்களில் அவர் உறுதியளித்தார். போர் முடிவொன்றுக்கு கொண்டுவரப்பட்டால், மனிதாபிமான கோணத்துக்கு புறம்பாக மேற்காசியாவில் ஓரளவு உறுதிப்பாடு ஏற்படவும் வழிபிறக்கும். பிராந்தியத்தில் என்றுமே முடிவடையாத இன்னொரு போருக்குள் அமெரிக்கா இழுத்து விடப்படுவதை ட்ரம்ப் விரும்பாமலும் இருக்கக்கூடும். 

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தப்படுமானால் இஸ்ரேலையும் செங்கடலின் ஊடாக செல்லும் கப்பல்களையும் தாக்குவதை யேமன் நாட்டின் ஹௌதி  படைகள் நிறுத்தக்கூடும். ஹௌதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும்  அண்மைய மாதங்களில் விமானத் தாக்குதல்களை நடத்தியபோதிலும், அவர்களின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.

செங்கடலில் அமைதி ஏற்படுமானால் சுயெஸ் கால்வாயின் ஊடாக வழமையான சரக்குக் கப்பல் போக்குவரத்தையும் மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும்.அதன் விளைவாக உலக பொருளாதாரத்தின் மீதான பணவீக்க நெருக்குதலை தணிக்கக்கூடியதாக இருக்கும்.

மூன்றாவது கட்டம் ஏன் ஒரு சவாலாக அமையப் போகான்றது?

தற்போதைய நிலையில் , போர்நிறுத்த உடன்படிக்கையின் முதலாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே இஸ்ரேலும் ஹமாஸும் கவனத்தைச் செலுத்தும். முதலாவது கட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான கணிசமான வாய்ப்பைக் காண்டிருக்கிறது. இரண்டாவது கட்டத்தில் கூடுதல் எண்ணாக்கையில் பாலஸ்தீன கைதிகள்  -- இஸ்ரேலிய பணயக்கைதிகள் பரிமாற்றம் இடம்பெறுவதை காணமுடியும். ஆனால், மூன்றாவது கட்டமே உண்மையான சவாலாக இருக்கும்.

காசா பள்ளத்தாக்கில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முற்றாக விலகவேண்டும் என்று ஹமாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஹமாஸை இல்லாமல் செய்ய தன்னால் முடியாது என்பதையும் ஏதோ ஒரு வழியில் அந்த இயக்கம் தப்பிப்பிழைக்கும் என்பதையும் இஸ்ரேல் இஸ்ரேல் இப்போது விளங்கிக்கொள்கிறது.

பெருமளவுக்கு நடைமுறைச் சாத்தியமான கோணத்தில் நோக்கினால், ஹமாஸ் காசா பள்ளத்தாக்கை ஆட்சி செய்வதையோ  அல்லது ஒரு படையாக  அதை விட்டுச் செல்வதற்கோ இஸ்ரேல் விரும்பவில்லை.இது இஸ்ரேலுக்கு ஒரு திரிசங்கு நிலையைத் தோற்றுவிக்கிறது.

போரை முடிவுக்கு கொண்டுவந்து காசாவில் இருந்து வெளியேறுவதற்கு இஸ்ரேல் இணங்குமேயானால்,  காசாவில் ஹமாஸ்  தொடர்ந்தும் ஒரு தீவாரவாத கிளர்ச்சிப்படையாக தொடர்ந்தும் இருக்கும். இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து நிலை கொண்டிருக்குமானால்,  நிலைபேறான போர்நிறுத்த உடன்படிக்கை  சாத்தியமில்லை. முழுமையான அழிப்புப் போரே தொடரும்.

நன்றி வீரகேசரி