யாழ்ப்பாண எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விசாரணை
21 தை 2025 செவ்வாய் 10:01 | பார்வைகள் : 202
போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில், அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று (21) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.