அண்ணா பல்கலை மாணவி வழக்கில் போலீசாருக்கும் தொடர்பு!
22 தை 2025 புதன் 03:21 | பார்வைகள் : 162
அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனிடமும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த போலீசாரிடமும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறையில் உள்ள ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவரை நேற்று அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையை கடுமையாக்கினர். அப்போது, தன்னுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த, கோட்டூர்புரம் மற்றும் அபிராமபுரம் போலீசார் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், அபிராமபுரம் காவல் நிலைய எழுத்தர் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவினர், ஞானசேகரனின் கூட்டாளிகளாக செயல்பட்ட போலீசாரிடமும் விசாரணையை துவக்கி உள்ளனர். ஞானசேகரன், போலீஸ் சீருடை மற்றும் வாக்கி டாக்கி சகிதமாக, அண்ணா பல்கலை வளாகத்தில் சுற்றிய தகவல், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிய வந்துள்ளது.
அந்த சீருடை யாருடையது என, போலீசார் மற்றும் ஞானசேகரனிடமும் விசாரணை நடக்கிறது. சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோரும் தனித்தனியே, ஞானசேகரனிடம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.