சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிரான்சில் சிறைச்சாலை.
22 தை 2025 புதன் 10:22 | பார்வைகள் : 858
பிரான்சில் Val-d'Oise பகுதியில் உள்ள 'maison d'arrêt d'Osny' சிறைச்சாலையில் கடமையாற்றிவந்த ஒரு லெப்டினன் தர அதிகாரி உட்பட ஐந்து அதிகாரிகள் அவரவர் வீடுகளிலும், சிறைச்சாலையிலும் வைத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என காவல்துறை வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கையடக்க தொலைபேசிகள், புகையிலை பொருட்கள், chicha புகைப்பதற்கான உபகரணங்கள் போன்ற சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட பொருட்களை தங்கள் உத்தியோக பூர்வ வாகனங்களில் மறைத்து வைத்து அவர்களுக்கு விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளே சிறைச்சாலையின் சட்டங்களை மீறியது பாரதூரமான குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இவர்கள் போதை வஸ்து பொருட்களையும் கைதிகளுக்கு விநியோகம் செய்திருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அப்படியாயின் ஐந்து அதிகாரிகள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் வட்டம் தெரிவித்துள்ளது.