வெற்றிமாறனின் படம் மூலம் ஹீரோவாகும் கருணாஸ் மகன்
22 தை 2025 புதன் 10:38 | பார்வைகள் : 144
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கருணாஸ். இவர் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கென் கருணாஸ் என்கிற மகனும் உள்ளார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த கென் கருணாஸை தன்னுடைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வந்தார் கருணாஸ்.
இதையடுத்து கென் கருணாஸின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் அசுரன் திரைப்படம். அப்படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்திருந்தார் கென். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். படத்தின் அவர் வரும் காட்சிகள் சில நிமிடங்களே இருந்தாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
இந்நிலையில், கென் கருணாஸ் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தான் தயாரிக்க உள்ளாராம். இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இயக்க உள்ளாராம். அது ஒரு ரீமேக் படம் என்றும் கூறப்படுகிறது. மலையாளத்தில் ஹிட்டான ஆலப்புழா ஜிம்கானா என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் தான் கென் கருணாஸ் ஹீரோவாக உள்ளாராம்.
ஆலப்புழா ஜிம்கானா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றுவதற்கான பணியில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் இறங்கி உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் தற்போது மனுசி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. அதில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ளார். இதுதவிர கவின் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றையும் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.