தேவாலயத்துக்குள் கத்தியுடன் நுழைந்த நபர்.. - சுட்டுக்கொலை!!
22 தை 2025 புதன் 16:23 | பார்வைகள் : 842
நபர் ஒருவர் கத்தியுடன் தேவாலயம் ஒன்றுக்குள் நுழைந்த நிலையில், அவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Corrèze மாவட்டத்தில் உள்ள Brive எனும் சிறு நகரில் இச்சம்பவம் இன்று ஜனவரி 22, புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 2.20 மணி அளவில் நபர் ஒருவர் அங்குள்ள தேவாலயம் ஒன்றுக்குள் நுழைந்துள்ளார். அவரிடன் கூரான கத்தி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குறித்த நபரை சரணடையும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் குறித்த நபர் காவல்துறையினரை தாக்க முற்பட்டுள்ளார். அதை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டு மேற்கொண்டுள்ளனர்.
இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட நபர் திருடப்பட்ட மகிழுந்து ஒன்றில் குறித்த தேவாலயத்துக்கு வருகை தந்ததாகவும், சம்பவ இடத்துக்கு அருகே குறித்த மகிழுந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.