Paristamil Navigation Paristamil advert login

திருடிய மணலுக்காக ரூ.3,500 கோடி! அரசுக்கு செலுத்த உத்தரவு

திருடிய மணலுக்காக ரூ.3,500 கோடி! அரசுக்கு செலுத்த உத்தரவு

23 தை 2025 வியாழன் 05:04 | பார்வைகள் : 369


திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் திருடிய ஆறு தனியார் நிறுவனங்கள், 3,500 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது.

தில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து உள்ளன.

சட்ட விரோதம்

இத்தகைய இயற்கை சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

கடந்த 2012 முதல் 2013 வரை, அதிக அளவில் தாது மணல், சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக புகார் எழுந்தன.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து, தாது மணல் கடத்தல் குறித்து விசாரித்தது.

அதன் தொடர்ச்சியாக, 2013 முதல் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டது. சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு உதவ, வழக்கறிஞர் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.

இக்குழு பல்வேறு கட்டமாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை அளித்தது.

சுரேஷ் அளித்த அறிக்கையில், 'தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட பிறகும், அதற்கு முன்பும், அதாவது, 2000 முதல் 2016ம் ஆண்டு வரை, சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை கணக்கிட்டு, மணல் எடுத்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 5,832 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், 'திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து, 1.01 கோடி டன் மணல் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டுள்ளது.

'இதில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்று மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுத்த தனியார் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த ஆண்டு ஜனவரியில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உரிய விளக்கம் அளிக்கவில்லை; இழப்பீடு செலுத்துவது தொடர்பாகவும் பதில் அளிக்கவில்லை.

அரசுக்கு இழப்பீடு

இந்த சூழ்நிலையில், மூன்று மாவட்டங்களில், சட்ட விரோதமாக தாது மணல் எடுத்து, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய ஆறு நிறுவனங்களிடம் இருந்து, 3,528.36 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க, தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில், வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 2002 - 2003 மற்றும் 2013 - 14 ஆகிய ஆண்டுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளியது தொடர்பாக, 2,195 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, திருநெல்வேலி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரவு

இது போல் மற்ற நிறுவனங்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த, சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்த ஆறு நிறுவனங்களும், அரசுக்கு செலுத்த வேண்டிய 3,528.36 கோடி ரூபாயை, 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.