பசுவின் கோமிய விவகாரம் : காமகோடிக்கு ஸ்ரீதர் வேம்பு ஆதரவு
23 தை 2025 வியாழன் 05:06 | பார்வைகள் : 382
பசுவின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி பேசியது சர்ச்சையான நிலையில், அவருக்கு, 'ஜோஹோ' தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பு வகிப்பவர் காமகோடி.
இவர் சமீபத்தில் மாட்டு பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது, 'சன்னியாசி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் மறந்துவிட்டது. அவரிடம் மருத்துவரை பார்க்க அறிவுறுத்தினர்.
ஆனால், அவரோ மாட்டின் கோமியத்தை தரும் படி கேட்டார். அதை கொண்டு வந்து தந்தனர். அந்த கோமியத்தை குடித்த 15 நிமிடத்தில் அவரின் காய்ச்சல் விலகியது.
'கோமியத்தில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி, செரிமான கோளாறை சரி செய்யும் ஆற்றல், வயிறு பிரச்னையை தீர்க்கும் திறன் உள்ளது. இவை ஆய்வில் தெரியவந்துள்ளன. கோமியம் மிக முக்கியமான மருந்து' என அவர் பேசினார்.
ஐ.ஐ.டி., இயக்குனரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாத பொருளானது. டாக்டர்கள் பலர் இதை மறுத்தனர். அவர்கள் கூறுகையில், 'கோமியம் குறித்த ஆய்வுகள் 'இன் விட்ரோ' எனப்படும் சோதனை தட்டுக்கள் அல்லது சோதனை குழாய்களில் செய்யப்பட்டவை.
'இன் விவோ' எனப்படும் வாழும் உயிரினத்துக்கு கோமியத்தை தந்து அவை ரத்தத்தில் வினை புரிவதை பற்றிய ஆய்வுகள் போதுமான அளவு இல்லை' என்றனர்.
இந்நிலையில், காமகோடியின் கோமியம் குறித்த கருத்துக்கு ஜோஹோ சி.இ.ஓ., ஸ்ரீதர் வேம்பு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
சென்னை, ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் பேராசிரியர் காமகோடி சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர். கோமியத்தின் நன்மைகள் குறித்த அறிவியல் கட்டுரைகளை அவர் மேற்கோள் காட்டினார். நவீன அறிவியலே நம் பாரம்பரிய அறிவின் மதிப்பை அதிகளவில் அங்கீகரித்து வருகிறது.
ஆனால், 'ஆன்லைன்' கும்பலைச் சேர்ந்தவர்கள் அறிவியல்பூர்வ அடிப்படையில் இல்லாமல், பாரபட்சமான முறையில் அவரை எதிர்க்கின்றனர்.
கோமியத்தை எதிர்ப்பவர்களுக்கு குடல் நாள தொற்றுக்கு ஆரோக்கியமான நபரிடமிருந்து மலத்தை பெற்று மாற்றி வைக்கும் அறுவை சிகிச்சை இருப்பது குறித்து தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.