Paristamil Navigation Paristamil advert login

பேச நேரம் வழங்காததால் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் அர்ச்சுனா

பேச நேரம் வழங்காததால் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் அர்ச்சுனா

23 தை 2025 வியாழன் 09:48 | பார்வைகள் : 372


தனக்கு பாராளுமன்றத்தில் பேச நேரம் வழங்கவில்லையெனவும் அதை அரசாங்கம் வழங்கத் தவறியுள்ளதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சைக் குழு எம்.பியான இராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 29 (2) இற்கு அமைய பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பில் இன்றையதினம் (23) கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா எம்.பி.

தான் அரசியலுக்கு வந்த பின் தன் மீது 24 வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், தான் வைத்தியராக இருந்த போது தனக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளுமோ வழக்குகளுமோ இருக்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இப்பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகி 64 நாட்களாகியும் தனக்கு கதைப்பதற்கு சரியாக நேரம் ஒதுக்கப்படவில்லை என அவர் இங்கு குறிப்பிட்டார்.

அத்துடன், இது தொடர்பில் முறைப்பாடொன்றை தாம் முன்வைத்தும், 36 நாட்களாகியும் தனது முறைப்பாட்டுக்கு பதில் வழங்கப்படவில்லையென்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

எனவே இன்றிலிருந்து தான் மனதால் வழங்கும் சகல ஆதரவையும் நிறுத்திக் கொள்வதாக அவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த, அவைத் தலைவர் அமைச்சர பிமல் ரத்நாயக்க, ஆயினும் எதிர்க் கட்சி உறுப்பினர் எனும் வகையில், எதிர்க் கட்சியே அவருக்கான நேரத்தை வழங்க வேண்டுமெனவும் அதனை மேற்கொள்ள எதிர்க்கட்சி தவறியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.


ஆயினும் இது எதனையும் பொருட்படுத்தாத அர்ச்சுனா எம்.பி. மீண்டும் சிங்களத்தில் கருத்து வெளியிட்டதோடு, இந்த அரசாங்கம் கொலைகார அரசாங்கம் எனவும், தன்னை புலி என காட்ட முனைவதாகவும் குறிப்பிட்டதோடு, அவ்வாறாயின் தன்னை சுட்டுக் கொன்று விடுமாறும் இங்கு குறிப்பிட்டார்.