இன்ஃபுளுவன்சா வைரஸ் பரவல் தீவிரம்.. தடுப்பூசி ஒரு மாதத்துக்கு தொடர்கிறது!
23 தை 2025 வியாழன் 12:32 | பார்வைகள் : 960
பிரான்சில் இன்ஃபுளுவன்சா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அதற்கான தடுப்பூசி போடும் பணி மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 30 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி, தற்போது பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"இன்ஃப்ளூவன்ஸா வைரஸ்களின் புழக்கம் பிரான்சின் பிரதான நிலப்பகுதியிலும் வெளிநாடுகளிலும் இன்னும் தீவிரமாக உள்ளது. இந்த சூழலில், இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கோவிட்-19 க்கு எதிரான கூட்டு தடுப்பூசி பிரச்சாரத்தை பிப்ரவரி 28, 2025 வரை நீட்டிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்." என சுகாதார அமைச்சகம் நேற்று ஜனவரி 22, புதன்கிழமை அறிவித்துள்ளது.
பிரான்சில் இந்த வைரசினால் 4 தொடக்கம் 15 வயதுக்குட்பட்டவர்கள் பெருமளவில் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரத்தில் 14,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4.3% சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.