Paristamil Navigation Paristamil advert login

கம்பேக் கொடுத்தாரா கெளதம் மேனன்?

கம்பேக் கொடுத்தாரா கெளதம் மேனன்?

23 தை 2025 வியாழன் 14:38 | பார்வைகள் : 178


தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், மின்னலே என பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். பெயரைப் போலவே இப்படமும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு முக்கியக் காரணம் இதில் கெளதம் மேனன், நடிகர் மம்முட்டி உடன் கூட்டணி அமைத்தது தான். ஷெர்லக் ஹோம்ஸுக்கு கேரளாவின் பதில் என்பது படத்தின் டேக் லைன்களில் ஒன்று. அதை நியாயப்படுத்தும் விதமாக, நகைச்சுவை கலந்த புலனாய்வு த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

சார்லஸ் ஈனாசு டொமினிக்காக வருகிறார் மம்முட்டி. முன்னாள் போலீஸ் அதிகாரியான இவரை சி.ஐ.டி டொமினிக் என சுருக்கமாக அழைக்கின்றனர். வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெறாத டொமினிக், கொச்சியில் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். உதவியாளரைத் தேடி வெளியிட்ட விளம்பரத்தைக் கண்டு ஒரு இளைஞர் நேர்காணலுக்கு வருவதிலிருந்து தொடங்கும் படம், டொமினிக்கின் வாழ்க்கையையும் சூழலையும் இயல்பாகப் பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது. 

தற்போது போலீஸ் சீருடை அணியவில்லை என்றாலும், உள்ளுக்குள் எப்போதும் விழிப்புடன் இருக்கும் போலீஸ்காரராக தான் தன்னை காட்டிக் கொள்கிறார் டொமினிக். துப்பறிவாளனாகவும் பணியாற்றும் இவருக்கு பொருளாதார ரீதியாக பெரிய வருமானம் இல்லாவிட்டாலும், அவரது புலனாய்வுத் திறனைத் திருப்திப்படுத்தும் விஷயங்களும் அரிதாகவே கிடைக்கின்றன. 

அப்படிச் செல்லும் டொமினிக்கைத் தேடி ஒரு பெண்ணின் பர்ஸ் வருகிறது, அதன் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. அந்தப் பர்ஸின் உரிமையாளரைத் தேடிச் செல்லும் பயணம் பல மர்மங்களுக்கும், எண்ணற்ற கேள்விகளுக்கும் அவரை இழுத்துச் செல்கிறது. டொமினிக்கும் அவரது புதிய உதவியாளர் விக்கியுடன் (கோகுல் சுரேஷ்) சேர்ந்து மர்ம முடிச்சுகளை அவிழ்கும் படம் தான் இந்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். 

அறிமுகமாகும் படத்திலேயே மம்முட்டியைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை நாயகனாகக் கொண்டிருந்தாலும், அவரது நட்சத்திர அந்தஸ்தை கௌதம் மேனன் பயன்படுத்தவில்லை. மாறாக, அவரது நடிப்புத் திறமையைத்தான் பயன்படுத்தியுள்ளார். சீருடையிலும் மற்றும் சீருடை இல்லாமல் பல புலனாய்வுப் பாத்திரங்களை மம்முட்டி ஏற்கனவே ஏற்று நடித்திருந்தாலும், டொமினிக்கிடம் மம்முட்டி காட்டும் அணுகுமுறை வித்தியாசமானது. 

நம் அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர் போல எளிமையான உடல்மொழியை மம்முட்டி வழங்கியுள்ளார். டொமினிக்கின் உதவியாளராக கோகுல் சுரேஷ் சரியான தேர்வு. நகைச்சுவை உணர்வுள்ள, ஆனால் தீவிரத்தன்மை குறையாத கதை சொல்லலில் மம்முட்டிக்கு சிறந்த துணையாக கோகுல் இருக்கிறார். பாச்சுவும் அற்புத விளக்கும் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த விஜி வெங்கடேஷ் மதுரியாக நடிக்க, நந்திதா என்ற நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் சுஷ்மிதா பட் நடித்துள்ளார்.

டொமினிக்கை அறிமுகப்படுத்திய பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய புலனாய்வுக்குள் விரைவாக நுழைகிறார். இயல்பாக செல்லும் கதையில், நகைச்சுவையின் ஒரு மெல்லிய அடுக்கு சேரும்போது, டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ஒரு வித்தியாசமான ரெசிபியாக மாறுகிறது. விஷ்ணு ஆர். தேவ் படத்தின் ஒளிப்பதிவாளர். குறிப்புகள் அதிகம் இல்லாத இதுபோன்ற ஒரு படத்திற்குப் பொருத்தமான ஒரு காட்சி இலக்கணத்தை, நம்பகத்தன்மையுடன் விஷ்ணு உருவாக்கியுள்ளார். 

கௌதம் மேனனின் நம்பிக்கைக்குரிய எடிட்டர் ஆண்டனிதான் படத்தொகுப்பைச் செய்துள்ளார். தர்புகா சிவ இசையமைத்துள்ளார். பெரிய சத்தங்களுடன் கூடிய பின்னணி இசை பெரும்பாலும் கொண்டாடப்படும் காலத்தில், அதைவிட மிகக் குறைவாகவே இசையைப் பயன்படுத்தியுள்ளார் கௌதம் மேனன். அதே நேரத்தில், படத்திற்குத் தேவையான மர்மமான மனநிலையை தர்புகா சிவா எளிமையாக உருவாக்கியுள்ளார். 

படத்தின் கலை இயக்குநர் ஷாஜியின் பணியும் சிறப்பானது. இரண்டரை தசாப்த கால அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநரின் கைரேகை படத்தில் முழுவதும் தெரிகிறது. பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் கதை சொல்லி கைதட்டல்களை வாங்கி இருக்கிறது இந்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்.