டிரம்ப் உருவம் செதுக்கப்பட்ட வைரம் பரிசளிக்கிறது குஜராத் நிறுவனம்
24 தை 2025 வெள்ளி 03:25 | பார்வைகள் : 262
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த வைர நிறுவனம், 4.5 காரட் எடையுள்ள ஆய்வக வளர்ப்பு வைரத்தை உருவாக்கி, அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உருவத்தை மிகத்துல்லியமாக செதுக்கி உள்ளது. இது, டிரம்புக்கு பரிசாக அளிக்கப்பட உள்ளது.
குஜராத்தின் சூரத் நகரம் வைர வர்த்தகத்தில் உலகப் புகழ் பெற்றது. ஆய்வக வளர்ப்பு வைரங்களுக்கு உலகம் முழுதும் தற்போது அதிக தேவையும், வரவேற்பும் உள்ளது.
வைர தொழிலை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு இதை ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில், சூரத்தைச் சேர்ந்த, 'கிரீன்லேப் டைமண்ட்ஸ்' என்ற நிறுவனம், ஆய்வகத்தில் தயாரான 4.5 காரட் வைரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உருவத்தை மிக துல்லியமாக செதுக்கி உள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்மித் படேல் கூறியதாவது:
இந்த வைரத்தை உருவாக்கி, வெட்டி, பாலிஷ் போட்டு முடிக்க மூன்று மாதங்கள் ஆனது. அதிபர் டிரம்ப்பின் முகம் மிக துல்லியமாக வரவேண்டும் என்பதால், மிகுந்த கவனத்துடன் செதுக்கப்பட்டது.
இது, 8.50 லட்சம் ரூபாய் மதிப்புடையது. இந்த வைரத்தை அதிபர் டிரம்ப்பிற்கு பரிசாக அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி 2023ல் அமெரிக்கா சென்றபோது, இதே சூரத் நிறுவனம் தயாரித்த, 7.5 காரட் எடையிலான ஆய்வக வைரத்தை, அப்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பரிசளித்தார்.