Paristamil Navigation Paristamil advert login

Aquarium of Paris! - அழகு மீன்களின் அணிவகுப்பு!!

Aquarium of Paris! - அழகு மீன்களின் அணிவகுப்பு!!

15 பங்குனி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18042


'கடல்' எப்போதும் விசித்திரமானது. அழகும் ஆபத்தும் ஒருசேர கொண்டது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில்.. கடல் வாழ் உயிரினங்களை கொண்ட Aquarium of Paris குறித்து அறிந்துகொள்ளலாம்...
 
63 ஆம் இலக்க பேரூந்தில் ஏறி, Albert de Mun நிறுத்தத்தில் இறங்கினால் எதிரே உள்ளது Aquarium of Paris. உங்களுக்குத் தெரியுமா... உலகில் முதலாவதாக கட்டப்பட்ட மீன்கள் சரணாலயம் இதுதான். 
 
1867ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த கண்காட்சியகம் திறக்கப்பட்டு, நூற்றாண்டுகள் கடந்து 1985 ஆம் ஆண்டு மூடப்பட்டது. பின்னர் 2006 ஆம் ஆண்டு இந்த இடம் நன்றாக விஸ்தரிக்கப்பட்டு முன்னெப்போதும் இல்லாத அளவு, பிரம்மாண்டமாய் 3500 சதுர மீட்டர்கள் இடத்தில் இந்த காட்சியகம் கட்டி, திறக்கப்பட்டது. 
 
மொத்தமாக 10,000 க்கும் மேற்பட்ட மீன்கள் இங்கு இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.  கூட்டமாக பாட்டு பாடும் மீன்கள், நடனமாடும் மீன்கள், ஒய்யாரமாக நீந்தும் ராஜா ராணி மீன்கள், விமான ஓடுதளம் கொண்ட கப்பல் போல் தட்டையான அகலமான மீன்கள், மூக்கு எது முழி எது என தெரியாத உருண்டையான மீன்கள் என அளவு கணக்கில்லை. ஒவ்வொரு மீன்களும் உங்களை ஆச்சரியப்படுத்த தவறாது. 
 
இங்கு 38 சுறாக்கள் கொண்ட மிகப்பெரும் தொட்டி ( ??!!) உள்ளது. 160 000 லிட்டர்கள் தண்ணீர் கொண்ட இராட்சத தொட்டியின் ஒரு பக்கம் கனமான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. 34 cm தடிமன் கொண்ட இந்த கண்ணாடியின் எடை வெறும் 24 தொன்கள் தான்.  
 
இங்கு மொத்தம் 20 இராட்சத தொட்டிகள் உண்டு. எட்டு தண்ணீர் வடிகட்டி மற்றும் சுத்திகரிப்பு அறைகள் உண்டு. 
 
தண்ணீர் தொட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள கடல் பாறைகள் முழுக்க முழுக்க செயற்கையானது. 320,000 கிலோக்கள் எடையுள்ள 'கொங்கிரீட்'ட்டினால் அமைக்கப்பட்டுள்ளது. 
 
ஆர்வம் கூடிக்கொண்டே செல்கிறதா... படிப்பதை நிறுத்திவிட்டு கீழுள்ள முகவரியை 'நோட்' செய்துகொண்டு புறப்படுங்கள்...
 
முகவரி: 5 Avenue Albert de Mun, 75016 Paris. தொலைபேசி : 33 14 06 92 32 3
 
மாலை 7 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்பது கூடுதல் தகவல்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்