இலங்கையர்களுக்கு இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
24 தை 2025 வெள்ளி 13:51 | பார்வைகள் : 228
இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விதிமுறைகளை முறையாக நிறைவேற்றிய பின்னரே மக்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப வேண்டும் என்றும், பணியகத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் பணியகத்தின் கண்ணியம் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளைப் பெற்ற சில நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அத்தகைய நபர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பணத்தை விட மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.