Paristamil Navigation Paristamil advert login

வாகன இறக்குமதியும், தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களும்

வாகன இறக்குமதியும், தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களும்

24 தை 2025 வெள்ளி 15:47 | பார்வைகள் : 156


வாகன இறக்குமதி தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில், பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் தனிநபர் பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகவில்லை.

குறிப்பாக, கடந்த வாரம் வெளியாகியிருந்த சுங்க வரி தொடர்பான அறிவித்தலை தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகளவு பேசப்படுவதை காண முடிகின்றது. வாகன இறக்குமதியாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் மற்றும் சில நிறுவனங்கள் வாகன மாதிரிகளின் பெயர்களுடன், அவற்றின் விலைகளையும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வதையும், சிலர் முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவித்தல்களை வழங்கி வருகின்றனர். கண்களுக்கு புலப்படாத சிறிய எழுத்துகளில், “வரி மாற்றங்களுடன் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்” என்பது போன்ற நிபந்தனைகளையும் உள்ளடக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் மீது நான்கு விதமான வரிகள் உள்ளடங்கியிருக்கும். அதில் இரு வரிகள் மாத்திரமே இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏனைய இரு வரிகளும் இதுவரையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அவற்றின் பெறுமதிகள் எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பது தொடர்பில் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, உறுதியான தகவல்கள் வெளியாகும் வரை அவசரப்பட்டு எவருக்கும் பணத்தை செலுத்த வேண்டாம் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் அதிகாரிகள் கூட அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில் தனிநபர் பாவனைகளுக்கான வாகன இறக்குமதிக்கு நாடு உண்மையில் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு உண்மையான பதில் இல்லை என்பதாக இருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், நாட்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த நிபந்தனையை பேணும் வகையில், எதிர்வரும் மாதங்களில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினாலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகமாக அமைந்திருக்கும் என்பது போன்ற ஒரு கருத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அவர்கள் அண்மையில் பங்கேற்றிருந்த சகோதர மொழி ஊடக கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் கருத்துப்படி, தற்போதைய சூழலில் வாகனம் இறக்குமதி செய்யலாம். அவற்றின் விலை சற்று உயர்வாக அமைந்திருக்கும். அத்தியாவசியமாக வாகன தேவை கொண்டவர்களுக்கு அவற்றை வாங்க முடியும் என்பதாக அமைந்திருந்தது.

டிசம்பர் மாத இறுதி புள்ளி விவர தரவுகளின் படி, நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படும் நிலையில், அதில் சீனாவின் பங்களிப்பான 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீங்கலாக, பயன்படுத்தக்கூடிய தொகை சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவே காணப்படுகின்றது. இவற்றை தொடர்ந்து சீராக பேண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு வாகனம் கொண்டு வரப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் அவை பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் அரசாங்கம் விதித்துள்ளது. உண்மையில் இது ஒரு வரவேற்கத்தக்க விடயமாகும். இதனால் அளவுக்கதிகமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவை விற்பனை பகுதிகளில் நீண்ட காலமாக காட்சிப்படுத்தி வைத்து, உயர்ந்த விலையில் விற்பனை செய்வதை தவிர்க்கவும், அளவுக்கதிகமாக அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை தவிர்க்கவும் உதவும். அத்துடன், அத்தியாவசியமாக வாகனம் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை உடையவர்கள் மாத்திரம் தமக்கு விரும்பிய வாகனத்தை இறக்குமதியாளர்களினூடாக இறக்குமதி செய்து பெற்றுக் கொள்ள முடியும். மற்றுமொரு சிறந்த விடயமாக குறிப்பிடக்கூடியது, தனிப்பட்ட பாவனைக்காக உற்பத்தி செய்யப்பட்டு மூன்று வருடங்களுக்கு உட்பட்ட வாகனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில தரப்பினர் பத்து வருடங்கள் வரையில் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்யலாம் என கூறினாலும், அவை நிர்மாணத் தேவைகள் போன்ற வணிக நோக்கங்களுக்கான வாகனங்களாக அமைந்துள்ளன. தனிநபர் பாவனைக்குரிய வாகனங்களுக்கு பத்து வருட காலம் பொருந்தாது. கொவிட் தொற்றுப் பரவலுக்கு பின்னரான சூழலில் ஜப்பானில் வாகன உற்பத்திகள் குறைவடைந்துள்ளன. இதில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் மீது வரி விதிப்பு உயர்வாக உள்ள நிலையில், அந்நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்நாடுகளில் ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை தாக்கம் செலுத்தியுள்ளது. இலங்கைக்கு ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வாகனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் நிலையில், மூன்றாண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற அரசின் தீர்மானம், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கட்டுப்படுத்தும் மற்றுமொரு வியூகமாக அமைந்திருக்கும்.

இறுதியாக வாகன இறக்குமதி 2020 மார்ச் மாதம் வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னரும் இலத்திரனியல் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் அவ்வப்போது இறக்குமதி செய்யப்பட்டாலும், திறந்த முறையில் பொது மக்கள் பாவனைக்கான வாகன இறக்குமதி பொருளாதார நெருக்கடியையும், அந்நியச் செலாவணி இருப்பு இன்மையையும் காரணம் காண்பித்து இடைநிறுத்தப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் அமெரிக்க டொலரின் பெறுமதி சுமார் 180 – 190 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாக காணப்பட்டது. தற்போது இந்தப் பெறுமதி ரூ. 290 – 295 ஆக காணப்படுகின்றது. இதில் சுமார் 100 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் பெறுமதி 2020 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விட உயர்வானதாகவே அமைந்திருக்கும். வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டால், சந்தையில் அமெரிக்க டொலர்களுக்கான கேள்வியும் அதிகரிக்கும், இதனால் தற்போது 290 – 295 ரூபாயாக காணப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி 310 - 320 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம்.

இவ்வாறிருக்க இந்த வாகன இறக்குமதி தொடர்பில் உள்நாட்டில் ஏற்கனவே வாகனங்களின் உரிமையாளர்களாக காணப்படுவோர் மத்தியிலும், வாகனமொன்றை வாங்கும் கனவுடன் திகழ்வோரிடமும் பிரதேச ரீதியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. வட பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால், அங்கு வாகனமொன்றை வாங்கி விற்பதில் ஆர்வம் காண்பிப்பது மிகவும் குறைவு. வாகனமொன்றை வாங்கினால் அதனை நீண்ட காலம் பேணி பயன்படுத்தும் ஒரு மனநிலை கொண்டவர்களாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் நிலைமை சற்றுவேறு, பத்து வருடத்தினுள் நாட்டின் அனைவருக்கும் வாகனமொன்றை வாங்கக் கூடிய சூழல் உருவாக்கப்படும் என அரசாங்கத்தின் அங்கத்தவரான பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஹேவகே அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிரகாரம் அப்பகுதி மக்கள் வாகன இறக்குமதி தொடர்பிலும், 40 – 50 இலட்சம் ரூபாய்க்கு வாகனமொன்றை கொள்வனவு செய்யலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பை கொண்டிருந்த போதிலும், அண்மைய வரி விதிப்பினூடாக அது சாத்தியமற்றது என்பது புலனாகியுள்ள நிலையில், பாவித்த வாகனங்களின் விலைகளில் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தை பொறுத்தமட்டில், வாகன இறக்குமதியில் அவர்களுக்கு முற்றிலும் நாட்டம் இல்லாத ஒரு நிலையே உள்ளது எனக் குறிப்பிடலாம். வாகனம் வைத்திருப்பவர்களும் வாகன இறக்குமதியுடன் தமது வாகனங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துவிடுமோ என்ற ஒரு பதட்டத்துடனும், அதனால் அவற்றை விற்பனை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.

வாகன இறக்குமதி என்பது வெறும் வாகனங்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படுவதல்ல. அவற்றுக்கு தேவையான உதிரிப்பாகங்கள், அவற்றை செலுத்துவதற்கு அவசியமான எண்ணெய் வகைகள் மற்றும் எரிபொருட்களும் இறக்குமதி செய்யப்பட வேண்டும். இவற்றுக்காகவும் அந்நியச் செலாவணி செலவிடப்பட வேண்டியிருக்கும். எனவே வாகன இறக்குமதி என்பது வாகனங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது என்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது.

உள்நாட்டில் காணப்படும் பாவித்த வாகனங்களின் விலைகளை நியமப்படுத்துவதற்கு பொறிமுறை இருப்பது அவசியமாகின்றது. குறிப்பாக வாகனங்கள் இறக்குமதியுடன், இந்த நியமப்படுத்தலை மேற்கொள்வது சிறந்ததாக அமைந்திருக்கும். வாகனங்கள் என்பது பெரும்பாலும் இரும்பினால் ஆனவை. தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. எனவே, காலப்போக்குடன் அவற்றின் பெறுமதி இலட்சக் கணக்கில் அதிகரிப்பது என்பது நடைமுறைக்கு புறம்பானதாகும். ஆனாலும், இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை காரணம் காண்பித்து பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. குறிப்பாக 2023 ஆண்டின் பிற்பகுதியில் 6.2 மில்லியனுக்கு விற்பனையாகிய கார், ஒரு வருடம் கழிந்த பின்னர் 7.8 மில்லியன் ரூபாய்க்கு விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை காண முடிகின்றது. இது போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமாகின்றது.

இந்த அசாதாரண விலை உயர்வுகளை கட்டுப்படுத்தவும், வாகன மாபியாக்களை அடக்கவும், அரசாங்கம் விலை மதிப்பீட்டு பொறிமுறை ஒன்றை பாவனையாளர்களுக்காக அறிமுகம் செய்யலாம். இதற்காக வாகன பதிவு திணைக்களத்தில் விலை மதிப்பீட்டுக்காக கருமபீடமொன்றை ஏற்படுத்தி, ஒரு சிறுதொகை கட்டணத்தை கொள்வனவாளரிடமிருந்து பெற்று, தாம் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வாகனத்தின் பதிவுப் புத்தகம் மற்றும் வாகனத்தின் பௌதிக நிலை அறிக்கை போன்றவற்றை கொண்டு அதன் சந்தை விலை ஒரு குறித்த மட்டத்தில் காணப்படும் என்பதை சான்றாக வழங்கலாம். இதனூடாக, அசாதாரணமாக அதிகரித்துச் செல்லும் பயன்படுத்திய வாகனங்களின் விலைகளை கட்டுப்படுத்தி சாதாரண நிலையை பேண முடியும். இது காப்புறுதி மற்றும் லீசிங் போன்ற வசதிகளுக்கும் உதவியாக அமைந்திருக்கும்.

வாகன விலை மதிப்பீடு தற்போது தனியார் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை கண்காணிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான முறைகளும் இல்லை. இவ்வாறான சூழலில் வாகனங்களின் விலைகளை சீரான நிலையில் பேணுவதற்கும், அளவுக்கதிகமான தொகையை செலுத்தி வாங்குவதை தவிர்க்கும் வகையிலும் அரசாங்கத்தின் தலையீடு முக்கியமானதாக அமைந்திருக்கும்.

இலங்கையில் ஏற்கனவே பயன்படுத்திய வாகனங்களின் விலைகளுக்கு நிகரானதாக அல்லது அவற்றை விட சற்றே அதிகரித்ததாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை இருக்குமாயின், பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் புதிய வாகனமொன்றை வாங்குவதில் நாட்டம் காண்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அவ்வாறான சூழலில், அவற்றின் லீசிங் பெறுமதி மற்றும் காப்புறுதி பெறுமதி போன்றனவும் மாற்றமடைய வேண்டும். ஆனாலும், அவற்றின் உடன்படிக்கைகளின் பிரகாரம் மாற்றம் ஏற்படாது. உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் 7 மில்லியன் ரூபாயாக காணப்பட்ட வாகனமொன்றின் விலை தற்போது 17 மில்லியனாக உயர்ந்துள்ளது. புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனமொன்றின் விலை 14 மில்லியனாக இருந்தால், ஏற்கனவே அந்த 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை வைத்திருப்போருக்கு ஏற்படும் நட்டம் அதிகமானதாக இருக்கும். ஏனெனில் அவர் 17 மில்லியன் பெறுமதிக்கே லீசிங் செய்திருப்பார், காப்புறுதி செய்திருப்பார். இவ்வாறான பாதிப்பிலிருந்து வாகன உரிமையாளர்களை பாதுகாப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பிலும் கேள்விகள் நிலவுகின்றன. இவ்வாறான பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தி, பாதிப்பு ஏற்படுவதை குறைத்து இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்பது போன்ற கருத்தை மத்திய வங்கியின் ஆளுநர் தமது உரையாடலின் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த அரசாங்கத்தினால் வாகன விலை மதிப்பீடு என்பது பயன்படுத்திய வாகனங்களுக்கு மாத்திரமன்றி, இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் முகவர்கள் உள்ளனர். ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில ரக வாகனங்களுக்கு முகவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு அப்பால் குறித்த நிறுவனங்களின் முகவர்கள் அல்லாதவர்களும் அதில் அடங்குகின்றனர். எனவே, இவ்வாறு இறக்குமதி செய்வோர், வாகனங்களின் விலைகளை தமக்கு விரும்பியவாறான விலைகளில் விற்பனை செய்வதை இந்த விலை மதிப்பீட்டு முறையினூடாக கட்டுப்படுத்த முடியும்.

வாகனம் என்பது பலரின் ஒரு கனவு. சிலருக்கு மட்டுமே அது சாத்தியப்படுகின்றது. அந்த கனவை நோக்கி பலர் பல்வேறு திட்டங்களை வகுத்து வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த வாகனக் கனவு என்பது பலராலும் சாத்தியப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், அதன் பின்னர் நாட்டில் எழுந்த சவால் நிலைகளால் அந்த கனவை கனவாகவே கொண்டு, அத்தியாவசிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டனர். நாட்டிலும் தற்போது தீர்க்கப்பட வேண்டிய பல முக்கிய பிரச்சனைகள் காணப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு முழுமையாக இன்னமும் மீளவில்லை. அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதில் மக்கள் இன்னமும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இன்றைய சூழலில் வாகனம் என்பது ஒரு அத்தியாவசியத் தேவை என்பதிலிருந்து ஒரு ஆடம்பரத் தேவை எனும் நிலைக்கு மேலும் தள்ளப்பட்டுள்ளது. பொது மக்களின் பொதுப்போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்வதனூடாக தனிநபர் பாவனைக்குரிய வாகனத் தேவையை ஓரளவு நிவர்த்தி செய்யலாம். குறிப்பாக, தற்போது வீதிகளில் இயங்கும் அரச பேருந்துகள் தரமுயர்த்தப்பட வேண்டும். குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள் தற்போது தூர பிரதேசங்களுக்கும், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கும் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நகரினுள் பேருந்து சேவையிலும் இவ்வாறான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவைகளை அறிமுகம் செய்ய வேண்டும். குறிப்பாக, அலுவலக செயற்பாடுகள் ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரங்களில் அவற்றை இயக்கினால் தனிநபர் வாகனங்களில் அலுவலகம் பயணிப்போர் அந்த சேவையை பயன்படுத்த தூண்டப்படுவர். ஆசன இருக்கைகளின் அடிப்படையில் பயணிகளை கொண்டு செல்வதையும் அல்லது ஒரு பேருந்தில் குறித்த எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தலாம்.

அலுவலக பணிகள் ஆரம்பிக்கும் முன்னரும், முடிவடைந்த பின்னரும் கொழும்பையும், அதனை அண்மித்த பகுதிகளிலும் வீதிகளில் பெருமளவு வாகன நெரிசலை அவதானிக்க முடிகின்றது. காரணம், கொழும்பில் கடந்த 20 வருடங்களில் வீதிகளில் விடுவிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப வீதி வலையமைப்பு விஸ்தரிப்பு செய்யப்படவில்லை. சந்திகளை ஊடறுத்து மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மேம்பாலங்களினூடாக மாற்று வீதிகள் அமைக்கப்படவில்லை. வாகன இறக்குமதியுடன் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்படும். வாகன விபத்துகளினால் இடம்பெறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகமாக உள்ளது. இதனால் வாகன இறக்குமதிக்கு முழுமையாக அனுமதியளிக்கப்படும் முன்னர் நாட்டினுள் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன. நீண்ட கால அடிப்படையிலேனும் வீதி விஸ்தரிப்பு மாற்று வீதிகள் அமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி தமிழ் Mirror