பிரெஞ்சு கஃபேயுடன் ஷேக்ஸ்பியர் & கொம்பனி புத்தகக்கடை!!
11 பங்குனி 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18341
புத்தகங்களும் சூடான ஒரு கஃபேயும் எப்போதும் இணைபிரியாத ஜோடி என்பது உங்களுக்குத் தெரியும். என்றால் பரிசில் முக்கியமான புத்தக விற்பன்னர்களான ஷேக்ஸ்பியர் & கொம்பனி நிறுவனத்தினருக்கு தெரியாமல் இருக்குமா?
Notre Dame Cathedral க்கு எதிரே மிக அமைதியாக இடத்தில் அமைந்துள்ள இந்த SHAKESPEARE & COMPANY புத்தகக்கடை குறித்த ஏற்கனவே பல தகவல்கள் பிரெஞ்சு புதினத்தில் படித்திருப்பீர்கள்.. இன்று அவர்களின் மற்றொமொரு அட்டகாசமான 'ஐடியா' குறித்து பார்க்கலாம்... அதுதான் Shakespeare & Company Café!!
கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் இந்த Café திறக்கப்பட்டது. சுவையான பிரெஞ்சு கஃபேகளும், ப்ளூபெர்ரி கேக்குகளும்.. இன்ன பிற குக்கீஸ்களும் இங்கு விற்பனைக்கு உண்டு. புத்தகம் வாசிப்பதற்குரிய அமைதியான சூழலும் இங்கு நிலவுகிறது.
2006 ஆம் ஆண்டு பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட Bob’s Bake Shop வெதுப்பக நிறுவத்தினரே, இங்கும் கஃபே திறந்துள்ளனர். உங்களை ஆச்சரியப்படுத்த அவர்கள் தவறுவதே இல்லை. பிரான்சில் பல இடங்களில் கிடைக்காத ஒரு சில வித்தியாசமான பண்டங்கள் இங்கு விற்பனைக்கு உள்ளன.
நீங்கள் ஏதேனும் 'ஓடர்' கொடுத்தால், அது ஒரு தட்டில் வைக்கப்பட்டு வரும். தட்டுக்கும் உணவு பொருளுக்கு நடுவிலே ஒரு காகிதத்தாள் வைத்திருப்பார்கள்... அதை கொஞ்சம் உற்று நோக்குங்கள்.. அதில் சில கேள்விகள் அச்சாகி இருக்கும்...
உங்களுக்கு போர் அடிக்குமென்றால் நீங்கள் அந்த கேள்விக்கு பதிலளிக்கலாம்.. உதாரணத்துக்கு 'ஆங்கிலத்தில் மிக அழகான வார்த்தை எது என நீங்கள் நினைக்கின்றீர்கள்?' , உங்களுக்கு எது தொடர்பாக தொடர்ச்சியாக கனவு வருகிறது?' என முப்பது சொச்சம் கேள்விகள் அதில் உள்ளது.. 'ஜாலி'யாக பதில் எழுதலாம்..
உங்கள் ஓய்வு நாளில் ஒரு பகுதியை இங்கு கழிக்கலாம்... புத்தகங்களும் வாங்கியதாய்ப் போச்சு... 37 rue de la Bûcherie, 75005 Paris இல் உள்ளது கடை!!