தோற்று விடுவோம் என்ற பதற்றமா: ஆம்ஆத்மிக்கு பா.ஜ., கேள்வி
26 தை 2025 ஞாயிறு 13:10 | பார்வைகள் : 280
கெஜ்ரிவாலின் பாதுகாவலர்கள் விஷயத்தில் சந்தேகம் கிளப்பிய ஆம்ஆத்மிக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
டில்லி சட்டசபைக்கு வரும் பிப்.,5ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் ஆம்ஆத்மியும், 27 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பா.ஜ.,வும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் போலீசார் பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் போலீசார் வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதற்கு பதிலாக, குஜராத் மாநில போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. இது கெஜ்ரிவாலுக்கு பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் போலீசாரின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவு நகலை சமூக வலைதளங்களில் பகிர்ந்த கெஜ்ரிவால், டில்லியில் என்ன தான் நடக்கிறது? என்று சந்தேகம் கிளப்பியிருந்தார். மேலும், ஆம்ஆத்மி கட்சியும் இது தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்து வந்தது.
இந்த சூழலில், கெஜ்ரிவாலின் இந்த சந்தேகத்திற்கு குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கி பதில் அளித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். ' இது உங்களின் முதல் தேர்தலா? அல்லது தோல்வி குறித்த பதற்றமா?
தேர்தல் பணிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரை ஈடுபடுத்துவது வழக்கமான ஒன்று தான். டில்லி தேர்தலுக்காக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளை கெஜ்ரிவால் தெரிந்து கொள்ளாதது ஆச்சர்யமளிக்கிறது.
தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதாலேயே 8 கம்பெனி குஜராத் போலீசார் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால்தான் குஜராத் போலீசாரை மட்டும் குறிப்பிட்டு விமர்சிக்கிறார்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.