மஹிந்தவின் மகன் கைது செய்யும் போது ஏன் கைவிலங்கு போடவில்லை - பொலிஸார் விளக்கம்
26 தை 2025 ஞாயிறு 16:22 | பார்வைகள் : 1302
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்சவை கைது செய்யும் போது ஏன் கைவிலங்கு போடவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க விளக்கமளிக்கையில், சந்தேக நபரின் நடத்தையின் அடிப்படையில் கைவிலங்கு போடுவதா இல்லையா என்பதை அந்த நேரத்தில் கடமையில் இருக்கும் அதிகாரி தீர்மானிப்பார் என்றார்.
இதேவேளை, யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அந்த புகைப்படம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தரோ எடுக்கப்பட்டதல்ல என பேச்சாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் யோஷித ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம், அவரின் நண்பர் அல்லது வேறு ஒருவரால் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.