பிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்!!
1 புரட்டாசி 2018 சனி 10:30 | பார்வைகள் : 18522
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், வழக்கத்துக்கு மாறான சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். பிரான்சின் மின்சார வழங்கல்கள் குறித்தும் அதன் மூலம் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.
மின்சார உற்பத்தியில், பிரான்ஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுமாராக ஒரு மணி நேரத்துக்கு 557 டெரா வாட் (TWh) மின்சாரத்தை பிரெஞ்சு தேசம் உற்பத்தி செய்கிறது.
உலகின் 23.8% வீத மின்சாரத்தை சீனா உற்பத்தி செய்து முதலாவது இடத்தில் இருக்க, 2.5% வீத மின்சாரத்தை பிரெஞ்சு தேசம் உற்பத்தி செய்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலுக்கு நடுவே அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளன.
பல்வேறு மூலக்கூறுகளில் (Source) இருந்து பிரான்சில் மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், அணு உலை மூலம் செய்யப்படும் மின்சார உற்பத்தியே பிரதானம்.
நிலக்கரி 4.08 வீதமும், எண்ணை 0.58 வீதமும், இயற்கை எரிவாயு மூலம் 3.69 வீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், 76.6 வீதத்தை அணு உலைகள் தக்கவைத்துள்ளன.
அனைத்து அணு உலைகளையும் பிரெஞ்சு அரசு முற்று முழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அணு உலைகளால் இயற்கை வளம் சுறண்டப்பட்டு வருகிறது எனவும், புவி வெப்பமடைகிறது எனவும் நாலா பக்கமும் எதிர்பு நிலவி வரும் வேளையில், அணு உலைகளை இழுத்து மூடிவிட்டு மின்சாரத்தேவைக்கு மாற்று வழி எதாவது தேடலாமா என மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றது அரசு!!