உக்ரைனுக்கு கடும் மிரட்டல் விடுத்த புடின்..... உலக நாடுகளிடையே அச்சம்
23 மார்கழி 2024 திங்கள் 04:06 | பார்வைகள் : 687
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது பல மாதங்களாக தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
மத்திய ரஷ்ய நகரமான கசானில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக பேரழிவுக்கு தயாராகுங்கள் என விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
போர் முனையில் இருந்து 620 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது கசான் நகரம். இங்குள்ள சொகுசு குடியிருப்பு வளாகம் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
வானுயர கண்ணாடி மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் நடப்பதை காணொளியாக ரஷ்ய சமூக ஊடக பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஞாயிறன்று நடந்த அரசாங்கம் தொடர்பான கூட்டம் ஒன்றில் பேசிய விளாடிமிர் புடின், யார் யார், எவ்வளவு மோசமாக ரஷ்யாவை அழிக்க முயன்றாலும், பல மடங்கு அழிவை அவர்கள் சந்திக்க நேரிடும்.
மட்டுமின்றி, ரஷ்யா மீது முன்னெடுக்கும் தாக்குதலுக்கு அவர்கள் கட்டாயம் வருத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மூன்றாண்டுகளாக நீடிக்கும் போரில், கசான் பகுதி குடியிருப்பு வளாகம் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் சமீபத்திய மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் குறித்த தாக்குதல் தொடர்பில் உக்ரைன் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய பிராந்தியம் மீதான உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடியாக தலைநகர் கீவ் மீது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையால் மிரட்டல் விடுத்திருந்தார்.
மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களால் ரஷ்யாவின் விமானப்படை தளம் மற்றும் ஆயுத தொழிற்சாலை மீதான தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திருந்தது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவம் அதிரடியாக முன்னேறியும் வருகிறது. அத்துடன், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரும் முன்னர் கிழக்கு உக்ரைனில் முடிந்தவரை அதிக பிரதேசத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
உக்ரைன் மனிதவளம் மற்றும் ஆயுதங்கலின் பற்றாக்குறையால் தடுமாறிவர, இந்த ஆண்டு மட்டும் இதுவரை 190 குடியிருப்பு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக இராணுவ வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.