"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
9 ஆவணி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18745
Georgette Agutte, ஒரு புகழ்பெற்ற பெண் ஓவியர். மே மாதம் 17 ஆம் திகதி, 1867 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே ஓவியங்களில் பலத்த ஆர்வம் இருந்ததால், ஓவிய வகுப்பில் சேர்ந்து ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டார். பின்னர் கைதேர்ந்த ஓவியர் ஆனார்.
நவீன சிந்தனைகளும், நல் ஒழுக்கங்களும் கொண்ட இவர் 1888 ஆம் ஆண்டு, Paul Flat என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை. ஆறு வருடங்கள் கழித்து 1894 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்கின்றார்.
வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடவில்லை.
மூன்று வருடங்கள் கழித்து, 1897 ஆம் ஆண்டு, பிரபல பத்திரிகையாளர் Marcel Sembat ஐ திருமணம் செய்துகொள்கிறார்.
கணவரின் அன்பு அவரின் மீதமான வாழ்க்கையை அழகாக்கிறது. அவரின் ஓவியத்திறமை மேலும் மெருகேறுகிறது.
செப்டம்பர் 5 ஆம் திகதி, 1922 ஆம் ஆண்டு அவரின் அன்பான கணவர் உடல்நலமின்றி இறக்கின்றார்.
கணவரின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு தாள் ஒன்றை எடுத்து "Voilà douze heures qu’il est parti. Je suis en retard" என எழுதுகின்றார்.
'அவர் என்னை விட்டு பிரிந்து 12 மணிநேரங்கள் ஆகிவிட்டது. நான் தாமதமாகிவிட்டேன்!' என எழுதப்பட்ட அந்த தாளை மேஜை மீது வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்கிறார்.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு வீதிக்கு அவரின் பெயர் சூட்டப்படுகிறது. காதலும் ஓவியங்களும் காலம் கடந்தும் வாழ்கின்றன!!