முப்பதுகளின் அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
7 ஆவணி 2018 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 18294
ரேடியோவை திருகுகிறீர்கள்... 85ல் வெளியான பாடல்கள் மாத்திரமே பாடிக்கொண்டிருக்கின்றது... திடீரென நீங்களும் அந்த காலத்துக்குள் நுழைந்து பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருமல்லவா... இதுபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்காக காத்திருக்கின்றது.
முப்பதுகளின் அருங்காட்சியகம் (Musée des Années Trente ) என்பது பரிசின் புறநகரில் உள்ளது. 1930 இல் இருந்து 1939 ஆம் ஆண்டுவரையான 10 வருட காலப்பகுதியில் உள்ள பொருட்கள் எல்லாமே இங்கே குவிந்து கிடக்கின்றன.
இங்கு என்னன்ன இருக்கின்றன தெரியுமா?
ஓவியங்கள், சிலைகள், தளபாடங்கள், மண்பாண்டங்கள், 'ஒரிஜினல்' இசைத்தட்டுக்கள் என பல 30 ஆம் ஆண்டுகளின் நினைவுகள் புதைந்து கிடக்கின்றன.
1930 ஆம் ஆண்டில் வரையப்பட்ட 20,000 ஓவியங்கள், 1,500 சிலைகள் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய பொருட்கள் உள்ளன.
முப்பதாம் ஆண்டுகளில் பிரெஞ்சு மக்களும் உலக மக்களும் எப்படி வசித்தார்கள், என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்தினார்கள் என்பதை இந்த அருங்காட்சியகம் ஊடாக நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். அவர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்து காத்துக்கிடக்கிறது அருங்காட்கியகம்.
28, Avenue André-Morizet, Boulogne-Billancourt எனும் முகவரியில் உள்ள இந்த அருங்காட்சியகம் திங்கட்கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்.
ஒன்பதாம் இலக்க மெற்றோவில் ஏறி Marcel Sembat நிலையத்தில் இறங்கி தடுக்கி விழுந்தால், அருங்காட்சியகம்!! இந்த கோடை விடுமுறை முடிவதற்குள் சென்று வந்துவிடுங்கள்..!!