Douanes அதிகாரிகளும் - சேவைகளும்! - சில விபரங்கள்!!
4 ஆவணி 2018 சனி 12:30 | பார்வைகள் : 18394
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், Douanes என அழைக்கப்படுகின்ற சுங்கவரி திணைக்கள அதிகாரிகள் குறித்து சில முக்கியமான தகவல்களை பார்க்கலாம்...!!
"Direction générale des douanes et droits indirects". சுருக்கமாக DGDDI. இன்னும் சுருக்கமாக Douanes அதிகாரிகள் என அழைக்கலாம்.
நாட்டின் முதுகெலும்பான வரி செலுத்துவதில் ஏதேனும் மோசடி இடம்பெற்றால் அதை கண்காணிப்பதுவே இவர்களின் தலையாய கடமை. ஆனாலும் மேலும் சில முக்கிய பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
Douanes அதிகாரிகளை விமான நிலையயங்களில், தொடரூந்து நிலையங்களில், நாட்டின் எல்லைகளில் அதிகளவில் காணலாம். நாட்டுக்குள் கள்ளப்பணம் புழக்கத்தில் இருப்பதை தடுப்பது, கடத்தப்படும் பொருட்களை கையும் களவுமாக பிடிப்பது, எல்லைகளை கண்காணிப்பது என மிக முக்கியமான தேச சேவைகள் அனைத்தையும் இவர்கள் மேற்கொள்கிறார்கள்.
முன்னதாக சுங்கவரி அதிகாரிகள் Ferme générale எனும் பெயரில் தனியார் நிறுவனமாக இயங்கினார்கள். இவர்களே வரி ஏய்ப்பு செய்து அரசிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் பிரெஞ்சு புரட்சியின் போது, இது அகற்றப்பட்டு DGDDI உருவாக்கப்பட்டது.
இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், லக்ஸம்பேர்க் போன்ற நாட்டின் எல்லைகளில் மிக தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். சட்டவிரோத பொருட்கள், நாட்டுக்குள் அனுமதி இல்லா பொருட்கள், போதைப்பொருள் என பல 'சட்டவிரோதங்களை' கைப்பற்றுகின்றனர்.
இவர்களிடம் அதிகமாக சிக்குவது போதைப்பொருட்கள் தான். தொன் கணக்கில் வருடா வருடம் சிக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? ஜோந்தாம் அதிகாரிகளுக்கும் தேசிய காவல்துறையினருக்கும் இல்லாத அதிகாரம் கூட இவர்களிடம் உள்ளது. யாரை வேண்டுமானாலும், எங்கேயும் வைத்து சோதனையிடலாம். கண்டிப்பாக ஒத்துழைக்கத்தான் வேண்டும்.
நாட்டுக்குள் வரும், வெளிச்செல்லும் எந்த தபால் பொதிகளையும், பெட்டிகளையும் திறந்து சோதனையிடலாம்.
நீங்கள் ஒரு பொருள் வைத்திருக்கின்றீர்கள் என்றால், அதில் ஒரு பகுதியை சோதனையிடுவதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக நீங்க சுடச்சுட சாண்ட்விச் செய்து கொண்டு செல்கின்றீர்கள் என்றால்... அதில் கூட அவர்கள் 'சாம்பிள்' பார்க்கலாம்...!!
அட கொடுமையே!!