Paristamil Navigation Paristamil advert login

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டம் உத்வேகம் பெறுகிறது

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டம் உத்வேகம் பெறுகிறது

26 மார்கழி 2024 வியாழன் 09:52 | பார்வைகள் : 271


பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய அரசாங்கத்துக்காக மக்கள் அளித்த ஆணை அருகித் தேய்ந்து போவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று பாராளுமன்ற சபாநாயகர் பதவியை துறந்த பின்புலத்தில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க  செய்த அறிவிப்பு தேசிய மக்கள் சக்தியை அதிகாரத்துக்கு  கொண்டுவந்த தேர்தல்களின்போது  மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் தடத்தில் அமைந்திருக்கிறது.

மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பேணிக்காப்பதில் உள்ள உறுதிப்பாட்டை மீளவலியுறுத்தியிருக்கும் ஜனாதிபதி எந்த தரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் தவறிழைப்பவர்களுக்கு எதிராக தனது அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தே தீரும் என்று தெரிவித்ததுடன்  மக்களின் ஆணையைப் போற்றி மதித்து சகல மட்டங்களிலும் பொறுப்புக்கூறலை உறுதிப்டுத்தும் அரசாங்கத்தின் குறிக்கோளை அழுத்திக் கூறியிருக்கிறார்.

இது அரசாங்கம் அதன் ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் ஒரு அறிகுறியாகும். மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு இருக்கும் ஆதரவுத் தளத்தை  தொடர்ந்து பாதுகாப்பதற்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் உதவும். அதிகாரத்துக்கு மீண்டும் வருவதற்காக எந்த மட்டத்துக்கும் கீழிறங்கக்கூடிய அரசியல் எதிரிகளை சட்டரீதியாகவும் நியாயமான முறையிலும்  வலுவிழக்கச் செய்வதற்கு அல்லது இயங்க இயலாமல் செய்வதற்கு ஒரு வாய்ப்பையும் இது வழங்கும். அரசியல் எதிரிகள் முன்னர் ஊழலில் ஈடுபட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமானால் இது சாத்தியமாகும்.

ஊழல் பிரச்சினையை கையாளுவது வேறு வழிகளிலும் கூட அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். அது நாட்டில் வர்த்தகத்துறைக்கு அனுகூலமான பருவநிலையை மேம்படுத்துவதன் மூலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெருமளவுக்கு கவர்ச்சியான நாடாக இலங்கையை மாற்றும். பதவியில் இருந்த அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட வரிவிடுமுறை உட்பட மருட்சியான நடவடிக்கைகளினால் கவரப்படாதவர்களாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருந்து வருகிறார்கள்.

ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி உலகளாவிய மட்டத்தில் 14  பேருக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது. அவர்களில் ஊழல்தனமான அரசாங்க கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமைக்காக இரு இலங்கையர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது முக்கியமான ஒரு விடயமாகும்.

அரசாங்கத்தை  அன்றி பிரத்தியேகமாக தனிநபர்களை இலக்குவைத்து விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் அமெரிக்கா இலங்கை தலைமைத்துக்கு எதிராக செயற்படவில்லை, மாறாக நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான கோட்பாடுகளை கடைப்பிடிப்பதில் பற்றுறுதி கொண்டிருக்கிறது என்பதை சமிக்ஞை காட்டுகின்றன.

ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்த தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் அதன் நிறுவனங்களை தூய்மைப்படுத்துவதற்கு கொண்டிருக்கும் ஆணையை அமெரிக்கா  முறைமுகமாக வலுப்படுத்துகிறது.

இறுதியாக 2020 ஆம் ஆண்டில் உலக வங்கியினால் வெளியிடப்பட்ட இலகுவான வர்த்தகச் செயற்பாட்டு சுட்டெண் அறிக்கையில்  ( Ease of doing Business Index)  190 நாடுகளின் மத்தியில் இலங்கை 99 வது இடத்தில் இருந்தது. ( அந்த சுட்டெண் அறிக்கையை  வெளியிடுவதை உலக வங்கி அந்த ஆண்டுடன் நிறுத்திவிட்டது) அரசாங்க நிருவாகத்திலும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் போன்ற  அமைப்புகளிலும்  நிலவும் பரவலான ஊழல் முக்கியமான பிர்ச்சினைகளில் ஒன்றாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் அல்லது உத்தியோகபூர்வமற்ற கொடுப்பனவுகளுக்காக அதிகாரிகளிடமிருந்து வரும் கோரிக்கை கள் காரணமாக முதலீடுகளைச்  செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயங்கினார்கள்.

ஒரே இடத்திலேயே சேவைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் எண்மமயப்படுத்தல் (Digitization ) மூலமாக செயன்முறைகளை ஒழுங்கமைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், ஊழல் ஒழிக்கப்படுவதை காட்டிலும் அது பெருமளவுக்கு நுணுக்கமான முறைகளில் தொடருவதையே காணக்கூடியதாக இருந்தது. சமூகமுறைமை முழுமைக்குள்ளும் ஊடுருவிவிட்ட ஊழலை வெற்றிகொள்வதற்கும்  ஊழல்தனமான முன்னைய அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் துரித பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான முதலீட்டு பருவநிலையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க சர்வதேச சமூகம் தயாரியிருக்கிறது போன்று தோன்றுகிறது.

நெகிழ்வான கொள்கை 

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு தேசிய மக்கள் சக்தி காட்டிய எதிர்ப்பு இன்னொரு பொருளாதார வீழ்ச்சிக்குள் நாட்டை மூழ்கடித்துவிடக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கும் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக விமர்சகர்கள் வாதாடினார்கள்.

இலங்கை நாணயத்தின் மதிப்பிறக்கம், எரிபொருட்களுக்கு தட்டுப்பாடுக்கான  சாத்தியம் மற்றும் 2020 --2022 காலப்பகுதியில் நிலவிய இடர்மிகு சூழ்நிலை மீணடும் தோன்றக்கூடிய ஆபத்து ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்த அச்சம் அமைந்தது. பொருளாதார காரணங்களுக்காக  கொண்டு ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பெரியளவில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

தேசிய மக்கள் சக்திக்குள் இருக்கும் பழைய மார்க்சிய சிந்தனை கொண்டவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை நிராகரிப்பதன் மூலம் இன்னொரு பொருளாதார வீழ்ச்சியை  நோக்கி நாட்டைக் கொண்டுசென்று விடுவார்கள் என்று கடுமையான பிரசாரம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை நாணயத்தின் பெறுமதி மீண்டும் ஒரு தாழ்ந்தை மட்டத்துக்கு செல்லும் என்றும்  பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துநிற்கும் நிலை உருவாகும் என்றும் மூன்று வருடங்களுக்கு முன்னர் நாடு கண்டதைப் போன்று அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கை செய்தார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு மாற்றீடாக உருப்படியான மாற்றுத் திட்டம் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லாத நிலையிலும் கூட அதை நிராகரிப்பது குறித்து ஆராயப்பட்டுகிறது என்ற அடிப்படையிலேயே அந்த எச்சரிக்கைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

உண்மையில், ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் ( ஏனைய எதிர்க்கட்சாகளுடன் சேர்ந்து ) தேசிய மக்கள் சக்தி முன்னாள் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு செய்து கொள்ளப்பட்ட சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்தது. உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் தேசிய நலன்களுக்கும் அந்த உடன்படிக்கை பாதகமானது என்று காரணமும் கூறப்பட்டது. ஆனால், தேர்தல்களுக்கு சற்று முன்னதாக தேசிய மக்கள் சக்தி அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் அடிப்படைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கின்ற அளவுக்கு தேசிய மக்கள் சக்தியின  அந்த புதிய நிலைப்பாடு அமைந்தது.  முழு அளவில் இல்லை என்றாலும், உடன்படிக்கையை புதிய அரசாங்கம் பின்பற்றுகிறது. உதாரணமாக கூறுவதென்றால், அரச நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக  தனியார்  மயமாக்குவதையும் அரச கல்வி மற்றும் சுகாதார முறைமையை மலினப்படுத்துவதையும் தேசிய மக்கள் சக்தி  இணங்கிக் கொள்ளவில்லை.

முன்னைய அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்திருந்தால் அவையெல்லாம் நடந்தேறியிருக்கும். இப்போது தனியார் - அரசாங்க கூட்டுப் பங்காண்மை (Private  - Public Partnership) குறித்து பேசப்படுகிறது. நாளடைவில் பொருளாதார உறுதிப்பாடு குறித்து புதிய அரசாங்கம் நம்பிக்கையை பெறுமானால் மேலும் கூடுதலான புத்தாக்க முயற்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

தனியார் சர்வதேச பிணை முறியாளர்களுடன்  அரசாங்கம் கண்டிருக்கும் இணக்கப்பாடு சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையினால் வகுக்கப்பட்ட பொருளாதாரப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதிலும் சீனா,  இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற கடன் வழங்கும் நாடுகள் உட்பட பரந்தளவில்  சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதிலும் அரசாங்கம் கொணாடிருக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 

தற்போது அரசாங்கம் அதன் சர்வதேச பிணைமுறிகளை மறுசீரமைப்பதற்கு தனியார் கடன் வழங்குனர்களிடம் இருந்து ஆதரவைப் பெற்றிருக்கிறது. இலங்கையின் 12.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணைமுறிகளில் 98 சதவீதத்துக்கும் நெருக்கமானவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் முதலீட்டாளர்கள் தங்களது கடனீட்டுப் பத்திரங்களை (Securities )  புதிய புதிய சீட்டுக்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு இணங்குவார்கள் என்று எதிர்பா்க்கப்படுகிறது.

இவ்வாறாக பரந்தளவில் கிடைத்திருக்கும் ஆதரவு வருட இறுதிக்கு முனானதாக கடன் மறுசீரமைப்பை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்கும். தனியார் கடன் வழங்குனர்களுடனான கடனை மறுசீரமைப்பது சரவதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் கீழான ஒரு அவசியமான நடவடிக்கையாகும். ஒரு சிறிய வகிபாகத்தைக் கொண்டிருந்தாலும், இலங்கை இன்று சஞ்சரிக்கும் பொருளாதார உலகில் இதுவே சிறந்த தெரிவாக  இருக்கும் என்று தோன்றுகிறது.

பணத் தட்டுப்பாடு 

பல்வேறு செலவினங்களை சமாளிப்பதற்கு பணம் இல்லாமல் இருப்பது தற்போதைய தருணத்தில் அரசாங்கம் எதிர்நோக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அண்மைய வெள்ளப்பெருக்கு, அரிசி, தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் காரணமல்ல. அத்துடன் அரசாங்கம்  எதிர்நோக்கும் நிதி நிர்ப்பந்த நிலையின் விளைவாக இது விடயத்தில் அது எதையும் பெரிதாக செய்துவிடவும் முடியாது.

ஆனால், தனியார் பிணைமுறியாளர்களின் ஒத்துழைப்பை பெற்றதன் மூலமாக சிக்கலான பேச்சுவார்த்தைகளை கையாளுவதில் தனத்கு இருக்கும் ஆற்றலை அரசாங்கம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தனியார் கடன் வழங்குனர்களுடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு நேர்மறையான சமிக்ஞையைக் காட்டி இலங்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தியிருக்கிறது. எதிர்காலத்தில் முதலீடுகளைப் பெறக்கூடிய வாய்ப்பான ஒரு நிலையில் இலங்கை இருக்கிறது. இதன் மூலம்  தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பிரசார காலத்திலும் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்ற விமர்சனங்களை அரசாங்கம்  மறுதலிக்க முடியும்.

அரசாங்கம் மக்களிடம் கேட்ட ஆணை 231 பக்கங்களைக் கொண்ட ஒரு விஞ்ஞாபனத்தில் உள்ளடங்கியிருக்கிறது. கலைகள், கலாசாரம் தொடக்கம்  பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி வரை பரந்தளவில்  பெருவாரியான விடயங்களில் வாக்குறுதி வழங்ஙப்பட்டிருக்கிறது. வாக்குறுதியின் மையப்பொருள் தற்போதைய ஊழல்தனமான முறைமையை மாற்றியமைப்பதும் சட்டத்தின் ஆட்சி மதிக்கப்படுவதை உறுதி செய்வதுமேயாகும்.

 இவையே  2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் மக்கள் சக்தியின் வீதிப்போராட்டங்கள் மூலமாக  அதிகாரத்தில் இருந்து விரட்டிய ' அறகலய ' போராட்ட இயக்கத்தின் கோரிக்கைகளாகவும் இருந்தன. பொருளாதாரத்தின் முற்றுமுழுதான வீழ்ச்சியே அந்த போராட்டத்தை மூளவைத்தது. அந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகவே தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தது. ஆனால், அதை குறுகிய காலப்பகுதிக்குள் செய்வது கஷ்டமானது என்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், ஏனைய பிரதான அரசியல் கட்சிகள் மீதான முற்றுமுழுதான வெறுப்பின் காரணமாக பொறுமையாக இருந்து  பொருளாதாத்தை மீண்டும் சரியான தடத்துக்கு கொண்டு வருவதற்கு  போதுமான கால அவகாசத்தை வழங்குவதற்கு மக்கள் தயாராக இருப்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதிர்ஷடவசமான ஒரு சூழ்நிலையாகும்.

கடந்த காலத்து பாவங்களுக்கு அரசாங்கத்தை பொறுப்பாக்க முடியாது என்பதையும் நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு கூடுதலான கால அவகாசம் தேவை என்பதையும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அரசாங்கம் அதன் ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு ஆணையை உறுதியாகப் பின்பற்றுவதன் முலமாக அதன் நம்பகத்தன்மையை தொடர்ந்து பேணிப் பாதுகாக்கின்றது. உண்மையானவை என்று நிரூபிக்க முடியாத பல்கலைக்கழக கல்வித்  தகைமைகள் பற்றிய பிரச்சினை  பொறுப்புக்கூறல் விவகாரத்திற்குள் வந்திருக்கிறது.

தாங்கள் பெற்றதாகக் கூறும் பல்கலைக்கழக பட்டங்களை நிரூபிக்க வேணடும் என்று அரசாங்கம் அதன் உறுப்பினர்களைை கேட்கும் என்பதை அண்மைய நிகழ்வுகளின் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத்தில் மூனாறாவது உயர்நிலையில் இருக்கும் பாராளுமன்ற சபாநாயகரின் பதவி விலகல் இந்த பொறுப்புக்கூறல் கடப்பாட்டின் ஒரு தெளிவான அறிகுறியாகும். தனக்கு இருப்பதாக உரிமை கோரிய கல்வித் தகைமையை நிரூபிக்க இயலாத நிலையில் அவர் பதவி விலகுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்