மலைகளுக்கான நுழைவாயில்! - ஒரு சுவாரஷ்ய பிரெஞ்சுக் கிராமம்!!
28 ஆடி 2018 சனி 13:30 | பார்வைகள் : 18985
அறுநூறுக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட ஒரு எல்லை கிராமம் உண்டு. அதன் பெயர் Le Perthus!!
பிரெஞ்சு-ஸ்பெயின் எல்லையில் உள்ள இந்த பிரெஞ்சுக்கிராமம், பல ஆச்சரியங்களை கொண்டது.
முதலாவது ஆச்சரியம் இந்த கிராமத்தை ஊடறுத்து ஸ்பெயினுக்குள் நுழையும் RN9 சாலையை பலாப்பழம் போல் இரண்டாக பிரித்து ஒரு பக்கம் பிரான்சுக்கும் ஒரு பக்கம் ஸ்பெயினுக்கும் கொடுத்துள்ளார்கள். 30 அடி அகலம் கொண்ட அந்த வீதியில், பிரெஞ்சு நாட்டுக்கு உரித்தான பகுதியில் மகிழுந்துகளை நிறுத்திவிட்டு, வீதியை கடந்து ஸ்பெயின் பக்கம் உள்ள கடைகளுக்குச் சென்றுவரலாம்.
இக்கிராமத்தை கடக்க முனைந்தால் நடு வீதியில் நின்று ஒரு காலினை பிரெஞ்சு நாட்டிலும், மற்றைய காலினை ஸ்பெயின் நாட்டிலும் அகல வைத்துக்கொண்டு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்...
இரண்டாவது ஆச்சரியம், இக்கிராமத்தில் வசிப்பவர்களுக்கு முற்றாக வருமான வரி நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் வருமான வரி செலுத்தத்தேவையில்லை. காரணம் என்னவென்றால், இங்கு அதிகமாக வந்து குவியும் வாகனங்கள்.
ஸ்பெயின் பகுதியில் அனைத்து பொருட்களும், குறிப்பாக மதுபானங்கள் வரி செலுத்தாமல் வாங்கிக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லுபவர்கள் வாகனங்களை பிரெஞ்சு பக்கத்தில் நிறுத்திவிட்டு, நடந்து சென்று ஸ்பெயில் பகுதியில் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் பிரெஞ்சு பகுதி கிராமத்துக்கு வருமானம் குவிகின்றது. இதனாலேயே அப்பகுதி மக்களுக்கு வரியை இரத்துச் செய்துள்ளது அரசு.
அட, தலைப்பை மறந்துவிட்டோம்... பிரான்சில் இருந்து மலைகள் கொண்ட ஸ்பெயினுக்குள் நுழைவதால், இதற்கு pertusum எனும் பெயர் சூட்டப்பட்டது. அதுவே பின்நாளில் Le Perthus என பெயர் மாற்றப்பட்டது. என்றால், மலைகளுக்கான நுழைவாயில் என அர்த்தம்!!