இன்று முதல் இலத்திரனியல் சாதனங்களில் Type C கட்டாயம்!!
28 மார்கழி 2024 சனி 12:07 | பார்வைகள் : 1768
இன்று, டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை முதல் பிரான்சில் விற்பனை செய்யப்படும் தொலைபேசிகள், தொடுதிரை கணணிகள், GPS கருவிகள், கமராக்கள், சிறிய ஒலிபெருக்கி பெட்டிகள், TWS எனப்படும் ப்ளூடூத் கருவிகள் போன்றவற்றுக்கு Type C எனும் சர்வதேச மின்னேற்றி வசதி கட்டாயமானதாகும்.
ஐரோப்பிய நீதிமன்றம் விதித்த இந்த சட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ”USB-C” வகை மின்னேற்றியானது உலகம் முழுவதும் கட்டாயமான ஒன்றாக மாறி வருகிறது. தொலைபேசியில் இரு புறங்கள் மூலமாகவும் அதனை பயன்படுத்த முடியும் என்றும், அதிகமான ‘தகவல் பரிமாற்றம், அதி வேகமான மின்னேற்றம்’ போன்ற வசதிகளும் இந்த USB-C இல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு அனைத்து சாதனங்களையும் மின்னேற்ற ஒரே ஒரு மின்னேற்றி போதுமானது என்பது, இலத்திரனியல் கழிவுகளை வெகுவாக குறைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களேயாகும். சென்ற வருடமே ஐபோன்கள் USB-C இற்கு மாறியிருந்த போதும், சில சந்தைகளில் 14 சீரீஸ் தொலைபேசிகள் (iPhone 14, 14 Plus, 14Pro, 14 Pro Max) போன்றன விற்பனையில் உள்ளன. அவற்றை இன்று முதல் விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மடிக்கணணிகளுக்கு (ordinateurs portables) 2026 ஆம் அண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி வரை அனுமதி உள்ளன.