புயல்வேகத்தில் பயணித்த இலங்கை அணி..வெற்றியை தட்டிப்பறித்த மூவர்
28 மார்கழி 2024 சனி 12:38 | பார்வைகள் : 224
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என தடுமாறியது.
அப்போது கைகோர்த்த டேர்ல் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்று 172 ஓட்டங்களாக உயர்ந்தது.
டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 42 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்தார். மைக்கேல் பிரேஸ்வெல் (Michael Bracewell) 33 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாசினார். ஹசரங்கா, பினுரா பெர்னாண்டோ மற்றும் தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா அதிரடியில் மிரட்டினர். இருவரின் ஆட்டத்தின் மூலம் 14வது ஓவரிலேயே இலங்கை 120 ஓட்டங்களை எட்டியது.
குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டஃப்பி ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த குசால் பெரேரா, கமிந்து மெண்டிஸ் அதே ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஃபோக்ஸ் வீசிய ஓவரில் தீக்ஷணா, ஹசரங்கா அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 5 ஓட்டங்கள் மட்டுமே இலங்கை அணி எடுத்தது.
இதனால் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேக்கப் டஃப்பி (Jacob Duffy) 3 விக்கெட்டுகளும், ஹென்றி மற்றும் ஃபோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.