தேர்தல் அரசியலை தாண்டியது தி.மு.க., - கம்யூ., நட்பு: ஸ்டாலின் உருக்கம்
30 மார்கழி 2024 திங்கள் 06:02 | பார்வைகள் : 238
தி.மு.க.,வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் நட்பு, இடையிடையே விடுபட்டு இருக்கலாம். ஆனால், இரண்டு கட்சிகளுக்குமான நட்பு, தேர்தல் அரசியலை தாண்டிய கொள்கை நட்பு,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நுாற்றாண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், 'நுாறு கவிஞர்கள் - நுாறு கவிதைகள்' நுாலை வெளியிட்டு, நுாற்றாண்டு விழா நினைவு பரிசை நல்லகண்ணுவிற்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்துள்ளேன். அவரது வாழ்த்தை விட, பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்து விடப்போவது இல்லை.
ஈ.வெ.ரா.,வுக்கும், கருணாநிதிக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவிற்கு கிடைத்துள்ளது.
அவர், 100 வயதை கடந்து, நமக்கு வழிகாட்டி, தமிழ் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்க தயாராக இருக்கிறேன் என்ற, உள்ள உறுதியோடு அமர்ந்திருக்கிறார்.
அவர் கட்சிக்காக உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார். அதனால் தான் வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார். அவர், 12 வயதில் போராட்டக்காரனாக உருவாகி, 15 வயதில் பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 18 வயதில் இந்திய கம்யூ., கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவரது தியாக வாழ்வானது, தலைமறைவு வாழ்க்கை, சிறைச்சாலை சித்ரவதை போன்றவை அடங்கியது. தாமிரபரணியை காக்க, அவர் நடத்திய போராட்டம் அனைவருக்கும் தெரியும். நமக்கெல்லாம் தனிப்பட்ட வேலை என்பது, வீட்டு வேலையாக அமைகிறது.
ஆனால், நல்லகண்ணுவிற்கு எந்த நேரமும், பொதுமக்கள் குறித்த சிந்தனையும், அவர்களுக்காக உழைப்பதை தவிர வேறு வேலையே இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது.
நாட்டுக்காக சதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி, ஏழு ஆண்டுகள் சிறை வைத்த காலம் மாறி, உயர் நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு தன் உண்மையான உழைப்பால் உயர்ந்தவர்.
ஒரு லட்சியத்திற்காக உண்மையாக உழைத்தால், அனைத்து அமைப்புகளின் நன்மதிப்பையும் பெறலாம் என்று நிரூபித்தவர். அவரது நுாற்றாண்டு விழா கொண்டாடும் நாளில், இந்திய கம்யூ., கட்சியும் நுாற்றாண்டு விழா கொண்டாடுகிறது.
தி.மு.க.,வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் நட்பு, இடையிடையே விடுபட்டு இருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்பது எப்போதும், எந்த சூழ்நிலையிலும் தொடரும். இரண்டு கட்சிகளுக்குமான நட்பு என்பது, தேர்தல் அரசியலை தாண்டிய கொள்கை நட்பு.
ஜாதி, வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம், எதேச்சதிகாரம், மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக, ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவது தான், நல்லகண்ணுவிற்கு நாம் வழங்கும் நுாற்றாண்டு விழா பரிசு.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில், தர்மலிங்கம் அறவழி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் மணிவண்ணன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.