உக்ரைன் போர் வடகொரிய இராணுவ வீரர்கள்
30 மார்கழி 2024 திங்கள் 06:05 | பார்வைகள் : 810
உக்ரைன் போர் முனையில் கொல்லப்பட்ட வடகொரிய இராணுவ வீரர் ஒருவர், தண்டனை விதிக்கப்பட்டு ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா கைப்பற்றியுள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனுக்கு எதிராக போரிட்டு இதுவரை 3,000 வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயங்களுடன் தப்பியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒருவரே 27 வயதான Gyong Hong Jong. வடகொரியாவின் சிறப்பு இராணுவப் பிரிவில் பணியாற்றி வந்துள்ள இவரது நாட்குறிப்பில், வடகொரியாவின் ஆளும் உழைப்பாளர் கட்சிக்கு எதிராக துரோகம் செய்துள்ளதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இவரது நாட்குறிப்பை கைப்பற்றியுள்ள உக்ரைன் உளவுத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடகொரியா தமக்கு இன்னொரு வாழ்க்கையை உருவாக்கி தந்துள்ளதாகவும், வாழ்க்கையின் புதிய தொடக்கமாக அது இருக்கும் என்றும் தமது நாட்குறிப்பில் அவர் பதிவு செய்துள்ளார்.
ஆனால் அவரது புதிய வாழ்க்கை என்பது ரஷ்யாவுக்காக உயிரை விடுவதுதான் என உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. போர் முனையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட Gyong Hong Jong, இதுவரை அடையாளம் காணப்பட்ட முதல் வடகொரிய வீரர் என்றே கூறப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்ய போரில் வடகொரியாவின் 11,000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதை ரஷ்யா இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், உக்ரைன் ட்ரோன் தாக்குதல் தொடர்பில் வடகொரிய வீரர்கள் பதிவு செய்துள்ள நாட்குறிப்புகள் பல கைப்பற்றப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடினுக்காக உயிரைவிடவும் தயார் என வடகொரிய வீரர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்து வந்தாலும், உக்ரைன் இராணுவம் மற்றும் உளவுத்துறையால் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.
கிம் ஜோங் உன்னுக்கு துரோகம் செய்துள்ளதாக குறிப்பிட்டு, தண்டனை அளிக்கப்பட்டுள்ள வீரர்களே ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் களமிறக்கபப்ட்டுள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.