இன்று கவர்னரை சந்திக்கிறார் த.வெ.க., தலைவர் விஜய்
30 மார்கழி 2024 திங்கள் 06:06 | பார்வைகள் : 369
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கவர்னரை சந்திக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்த நபர் தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர்களுடன் ஞானசேகரன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், தி.மு.க.,வினர் இதனை மறுத்து வருகின்றனர்.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், த.வெ.க., தலைவர் விஜய் இன்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விஜய், 'பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை யாரிடம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே, அதற்காகவே கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும்', எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் கவர்னர் ரவியை இன்று மதியம் 1 மணிக்கு சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, அண்ணா பல்கலை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் அளிப்பார் என்று தெரிகிறது.