பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யணும்; கவர்னரிடம் விஜய் வலியுறுத்தல்
30 மார்கழி 2024 திங்கள் 08:33 | பார்வைகள் : 428
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்த நபர் தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர்களுடன் ஞானசேகரன் இருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், தி.மு.க.,வினர் இதனை மறுத்து வருகின்றனர்.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, த.வெ.க., தலைவர் விஜய் இன்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் கவர்னர் ரவியை ராஜ்பவனில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
கவர்னருடனான சந்திப்பு குறித்து த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்; இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கவர்னர் ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை . இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட கவர்னர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.