டில்லியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் மெட்ரோ ரயில் சேவை!
30 மார்கழி 2024 திங்கள் 15:19 | பார்வைகள் : 287
உலக நாடுகளில் உள்ள பல நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில் சேவையானது பெரும் பங்காற்றுகிறது.
லண்டனில் முதன்முதலாக சன நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மின்சாரம் மூலம் ரயிலை இயக்கவும் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியா என மெட்ரோ ரயில் சேவை வியாபித்தது.
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரை ஒன்றிணைப்பதற்கும், இந்தியாவின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சு “இந்தியா பற்றி அறிந்துகொள்வோம்” (Know India Program) எனும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் 79ஆவது குழுவில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள். அத்திட்டத்தினூடாக டில்லி, மும்பை மற்றும் புவனேஸ்வர் நகரங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம்.
அந்த வகையில், இந்தியாவின் மெட்ரோ ரயில் சேவையின் முக்கியத்துவம் மற்றும் அதன் அனுபவம் குறித்து பகிர்ந்துகொள்கிறேன்.
இந்தியா என்பது பெரும் தேசம். அங்கு அண்மைய தரவுகளின்படி, 1.429 பில்லியன் மக்கள் வாழுகின்றார்கள். அங்கு சனத்தொகை அதிகமான நகரமாக டில்லி காணப்படுகிறது. அங்கு 33 மில்லியன் மக்கள் வாழுகின்றனர். ஆனால் இலங்கையில் 23 மில்லியன் மக்களே வாழுகின்றனர். இவ்வாறு சனத்தொகை அதிகமான நகரங்களில் இந்த மெட்ரோ ரயில் சேவையின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகவும் அத்தியாவசியத் தேவையுமாக உணரப்படுகிறது.
இந்தியாவில் அதிகளவான நகரங்களில் போக்குவரத்து நெரிசலை மெட்ரோ ரயில் சேவை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ சேவை 1984ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்டது.
உலகிலேயே மிகப் பெரிய மெட்ரோ ரயில் சேவையில் டில்லியில் உள்ள மெட்ரோ ரயில் சேவை 12ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் டில்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூர் கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் குர்காவ்ன் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை காணப்படுகிறது.
பசுமை இல்ல வாயுக்கள் உருவாகுவதை தடுக்கின்றதெனத் தெரிவித்து டில்லி மெட்ரோ ரயில் சேவைக்கு ஐக்கிய நாடுகள் சபை சான்று வழங்கியுள்ளது. இந்தியாவில் டில்லி மெட்ரோ ரயில் திட்டம் போக்குவரத்தில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் நவீன மயமாக்கப்பட்டு காணப்படுகிறது.
டோக்கன்கள், ஸ்மார்ட் கார்ட்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஸ்மார்ட் கார்ட்கள், பொதுவான மொபிலிட்டி கார்ட்கள் அல்லது கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணிகள் தேவையான கட்டணத்தைச் செலுத்தலாம்.
மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் நுழையும் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பயணச்சீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்தவுடன் உள் நுழைவதற்கான பாதை திறக்கப்படும்.
ரயில் நிலையத்துக்கு உள்ளே ரயில் மேடைக்கு செல்வதற்கு மின்சார படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் மேடையில் பெண்கள் காத்திருப்பதற்கும், ரயிலில் ஏறுவதற்கும் தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் அடைந்ததும் ரயிலின் கதவு தானியங்கி முறையில் திறக்கப்படும். ரயில் நிலையங்களின் பெயர்கள் அங்கு திரையில் காட்சிப்படுத்தப்படுவதோடு, அறிவிப்பும் விடுக்கப்படுகிறது. நாம் செல்லும் ரயில் நிலையம் வந்தடைந்ததும் இறங்கி வழங்கப்பட்டுள்ள பயணச்சீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்தவுடன் மீண்டும் நாம் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதை திறக்கப்படும்.
இங்கு தானியங்கி இயந்திரங்களே பயணிகளின் பயணச் சீட்டுக்களை சோதனை செய்கின்றன. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் போவதும் வருவதுமாக காணப்படும். இதனால் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதில்லை. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தினால் காற்று மாசுபாட்டைக் குறைத்தல், பயணிகளுக்கு நேர வீண்விரயத்தை குறைத்தல், விபத்துகளைக் குறைத்தல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் எரிபொருள் சேமிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
இவ்வாறான திட்டங்கள் தற்காலத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியமான ஒன்றாக காணப்படுகிறது. ஆனால், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மிக தாமதமாகவே இந்த சேவை சென்றடைகிறது. காரணம் மெட்ரோ ரயில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அதிகளவு நிதி தேவைப்படுகிறது.
எமது நாடான இலங்கையில் இவ்வாறான மெட்ரோ ரயில் திட்டங்களை கொழும்பு போன்ற சனநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுடன் எமது அயல்நாடான இந்தியாவின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதனால் எமது நாட்டில் சன நெரிசல், நேர வீண் விரயம், சூழல் மாசுபாட்டையும் குறைத்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கி வருமானத்தையும் ஈட்ட முடியும்.
நன்றி வீரகேசரி