சீமான் -டி.ஐ.ஜி., வார்த்தைப்போர் உச்சம்: வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!
1 தை 2025 புதன் 03:21 | பார்வைகள் : 638
காக்கிச்சட்டையில் ஒளிந்து கொண்டு இருக்கும் கிரிமினல் நீ. நீ செல்போன் திருடன். ஆடியோ திருடன். இந்த அரசு என்னுடன் மோத துப்பு இல்லாமல், இவரை முன் வைத்து பின்னாடி இருந்து ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறது,'' என்று, டி.ஐ.ஜி., வருண்குமாரை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார்.
டி.ஐ.ஜி., ஆக பதவி உயர்வு பெற்றுள்ள வருண்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், சீமான் ஒரு தொழிலதிபர் வாயிலாக என்னிடம் மன்னிப்பு கேட்க தூது விட்டார். அதற்கு மறுத்துவிட்டேன். பொதுவெளியில் என் மீது குற்றச்சாட்டு வைத்ததோடு, என் வீட்டு பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசினார். கொலை மிரட்டல் விடுத்தார். பின், எதையும் சந்திப்பதாக சவால் விட்டார். இத்தனைக்கும் பின், மன்னிப்பு கேட்கிறேன் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்; மறுத்து விட்டேன் எனக்கூறி இருந்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் அளித்த பதில்: நீ அவ்வளவு பெரிய ஆள் இல்லை. நான் மன்னிப்பு கேட்க நீ யார். தவறு செய்தது நீ. பத்திரிகையாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளை விட்டு கெஞ்சியது நீ. எதற்கு பேச வேண்டும் என எழுந்து சென்றவன் நான்.எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உனக்கு பயந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா? நீ தான் கெஞ்சினாய். பிரச்னை வேண்டாம். அண்ணனுடன் தகராறு வேண்டாம் என கெஞ்சியது நீ.
வருண் குமார் தான் துப்பாக்கி, பட்டாலியன் எல்லாம் வைத்திருக்கிறாரே; எனக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்ல கேவலமாக இல்லையா உனக்கு? சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை கொடு; பாத்துக்கலாம். குற்றவாளி நீ. காக்கிச்சட்டையில் ஒளிந்து கொண்டு இருக்கிறார். கிரிமினல் நீ. நீ செல்போன் திருடன். ஆடியோ திருடன். ஆடியோ திருடியது நீ. இந்த அரசு என்னுடன் மோத துப்பு இல்லாமல், இவரை முன் வைத்து பின்னாடி இருந்து ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறது.இதற்கு இந்த அரசு டி.ஐ.ஜி., பதவி உயர்வு அளிக்கிறது. இவருக்கும், பக்கத்து பக்கத்து ஊரில் பதவி கொடுத்து உள்ளது. ஹனிமூன் போற மாதிரி பொண்டாட்டிக்கும், புருஷனுக்கும் பக்கத்து மாவட்டங்களில் போஸ்டிங் போடும்போதே தெரியலையா? மற்ற போலீசார் வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஆடியோவை தி.மு.க., ஐ.டி., விங்கிடம் கொடுத்து விளம்பரப்படுத்தியது நீ. எனக்கு அவரெல்லாம் ஒரு ஆள். நான் என்ன வேலை செய்றேன். அவர் என்ன வேலை செய்றார். நான், உங்கள் குழந்தைகளுக்காகவும் போராடி கொண்டு உள்ளேன். சவால் விட்டாரே மோதி பார்த்துவிட வேண்டியதுதான். என் மீது 136 வழக்குகள் உள்ளன. பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது. மக்களுக்காக நான் பல அவமானங்களை பார்த்தவன். டி.ஐ.ஜி., பதவியில் இருந்து கொண்டு அரசியல்வாதி போல் என்னை விமர்சனம் செய்கிறார். அமைச்சர்கள் நேரும், மகேசும் என்னை விமர்சனம் செய்ய மாட்டார்கள். தி.மு.க., மாவட்டச் செயலாளர் போல் பேட்டி கொடுக்கிறாய்? டி.ஐ.ஜி., பதவியை விட்டுவிட்டு அந்த கட்சியில் போய் பதவி வாங்கிக்கொள்.
மோதுறதுனு ஆகிவிட்டது. மோதி விட வேண்டியது தான். நீ போலீஸ் பயிற்சி பெற்றவன். நான் போராளி பயிற்சியாளன். உன்னால், இங்கு மட்டும் தான் உளவு பார்க்க முடியும். நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தி.மு.க., அதிகாரம் இருக்கும் வரை . 2026க்கு பிறகு என்ன பாடுபட போகிறார்கள் இந்த திருட்டு திராவிடர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
அதிருப்தி
இப்படி சீமான், போலீஸ் டி.ஐ.ஜி., இடையிலான மோதல், ஒவ்வொரு நாளும் புதிய அநாகரிகத்தை எட்டி வருகிறது. இதற்கு முடிவு கட்டாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடகமா
முன்னதாக, சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சி சீமானை போலீசார் கைது செய்தனர். மாலையில் விடுதலை ஆன பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தனி மனிதன் வளாகத்திற்குள் சென்று பெண்களை மிரட்டும் துணிவு எப்படி வந்தது. இவ்வளவு பெரிய குற்றம் என அவருக்கு தெரியுமா தெரியாதா?அந்த குற்றத்தை செய்யும் துணிவு, பின்புலம் இல்லாத ஒரு தனிமனிதனுக்கு எப்படி வரும். அரசியல் பின்புலமோ, அதிகார பின்புலமோ எப்படி வரும். நமக்கு தெரிந்து இரண்டு புகார்கள் வந்துள்ளன. இதற்கு முன்னர் எத்தனையோ.
சொல்லாமல் மறைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவோஎதிர்க்கட்சியாக இருந்த போது, ஒவ்வொரு சம்பவத்திற்கும் இவர்கள் கொடுத்த குரல்கள் எவ்வளவு ? எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்க ளான போது, இந்த கொடுமைக்கு முற்றப்புள்ளி வைப்போம். இப்படி செய்வோம். அப்படி செய்வோம் என்றீர்கள். இப்போது என்ன செய்கிறீர்கள். எத்தனை ஆயிரம் முதல் தகவல் அறிக்கை பதிவாகும்போது, இது மட்டும் எப்படி வெளியே வந்தது. இதில், மட்டும் எப்படி தொழில்நுட்பக் கோளாறு வந்தது. குற்றவாளியின் வாக்குமூலத்தை வெளியில் கூறியுள்ளீர்களா?
நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எத்தனை போராட்டம் நடத்தினீர்கள். அது நாடகமா?நாங்கள் நடத்துவது நாடகமா. நீங்கள் போராடினால் நேர்மையான போராட்டமா?. உங்களை எப்படி நம்புவது. நீங்களாக எதையும் செய்ய மாட்டீர்கள். நாங்களும் போராடக்கூடாது. போராட இடம் தர மாட்டீர்கள். பேசவும் விட மாட்டீர்கள். நல்லாட்சி என நீங்கள் சொல்லிக் கொண்டு உள்ளீர்கள். மக்களை சொல்ல சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.