பிறந்தது ஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
1 தை 2025 புதன் 03:24 | பார்வைகள் : 409
2025ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறந்தது . இதனை மக்கள் கொண்டாடி வருகின்றனர்..அவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
கவர்னர் ரவிபுத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்.
முதல்வர் ஸ்டாலின்
இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று, புத்தாண்டு 2025 பிறக்கிறது.2024 ஆண்டு தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசின் தொடர் சாதனைப் பயணம் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்தச் சாதனைகளை உச்சிமுகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 லோக்சபா தேர்தலில் 'நாற்பதுக்கு நாற்பது' என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். தமிழ்நாடும். புதுச்சேரியும் அளித்த அந்த மாபெரும் வெற்றிதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்கான குரல் இன்னும் உயிர்ப்போடு ஒலித்துக் கொண்டிருக்க- தொடர்ந்து நிலைத்து நிற்க மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து- இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழக மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும். வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ஆம் ஆண்டு! புத்தாண்டாகிய 2025 ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கட்டும். தமிழக அரசிற்கு வழிகாட்டும். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
துணை முதல்வர் உதயநிதிபிறக்கின்ற 2025 புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் புத்தொளி வீசட்டும்! கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ஆம் ஆண்டிலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும். 2026-இல், 7-ஆவது முறையாக ஆட்சி அமைந்திட 2025-இன் ஒவ்வொரு நாளும் உழைத்திடுவோம்.
தொடங்கும் புத்தாண்டிலும் தமிழ்நாட்டில் பாசிச சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் - சமூக நீதி, மத நல்லிணக்கம், சமத்துவம் என முற்போக்குப் பாதையில் பயணிப்போம் என்கிற உறுதியோடு புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி ஆட்சியில், முன்னெப்போதுமில்லாத வகையில், நம் நாடு, உலகின் முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கிறோம். உற்பத்தி, விவசாயம், வானியல் ஆராய்ச்சி, விளையாட்டு, தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும், நமது நாடு பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இந்த ஆண்டு, உலக அளவில், பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு நாம் முன்னேறவிருக்கிறோம். இவை அனைத்தும், மக்கள் நலனை நோக்கமாகக் கொண்ட, ஊழலற்ற நல்லாட்சியால் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், செழுமை வாய்ந்த வரலாறு கொண்டது நம் தமிழகம். பல துறைகளிலும், உலகளாவிய அளவில் சாதனை படைத்தவர்கள் நம் தமிழக மக்கள். ஒவ்வொரு ஆண்டும், நம்மில் இருந்து பல சாதனையாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். உரிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றால், நமது இளைஞர்கள், இன்னும் பல உயரங்களை எட்டுவார்கள். நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!