தொட்டதற்கெல்லாம் கைது செய்வதா: தமிழக அரசு மீது மா.கம்யூ., விமர்சனம்!
1 தை 2025 புதன் 03:28 | பார்வைகள் : 488
தொட்டதற்கு எல்லாம் முன்னெச்சரிக்கை கைது என போலீசார் நடந்து கொள்வது சரியல்ல'', என தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனநாயக அமைப்பில் பிரசாரங்கள், போராட்டங்கள் எல்லாம் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகள். ஆனால் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தெருமுனை கூட்டம் என எல்லாவற்றிற்கும் அனுமதி தருவதில் போலீசார் இழுத்தடிக்கின்றனர். மேலும், தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கைது என போலீசார் நடந்து கொள்வது சரியானதல்ல.
உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடி என்ற சிறு கிராமத்தில், பட்டா கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்களை கூட கைது செய்துள்ளனர். போலீசாரின் இந்த மோசமான போக்கு தமிழக அரசின் நற்பெயரைத்தான் சீர்குலைக்கும், எனவே போக்கை மாற்றிக்கொண்டு போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டுமென வற்புத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.