திருமாவை தொடர்ந்து தி.மு.க.,வை விமர்சனம் செய்யும் பாலகிருஷ்ணன்
2 தை 2025 வியாழன் 03:53 | பார்வைகள் : 733
வி.சி.,யை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தி.மு.க.,வுக்கு எதிராக போர்க்கொடி துாக்கத் துவங்கி உள்ளது. தி.மு.க.,வுக்கு ஆதரவாக கம்யூ., கட்சிகள் செயல்பட வேண்டி உள்ளதால், தொழிற்சங்கங்கள் எதுவும் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது; அது கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால், மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன், தி.மு.க.,வை கடுமையாக விமர்சனம் செய்யத் துவங்கி உள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், 2019 முதல் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட, 10 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின், வி.சி., துணை பொதுச்செயலராக இருந்த ஆதவ் அர்ஜுனா, தி.மு.க., அரசை விமர்சிக்க துவங்கினார்.
த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. 2026ல் மன்னராட்சிக்கு முடிவு கட்டப்படும்' என, தி.மு.க., தலைமையை குறிவைத்து கடுமையாக விமர்சித்தார். அதனால், வி.சி.,யை விட்டு விலக வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
சூடேற்றியது
அதைத் தொடர்ந்து, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு, '2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விடம் 25 தொகுதிகளை கேட்போம்' என்றார்; இதுவும் ஆளும் வட்டாரத்தை சூடேற்றியது.
தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், 'அமைச்சர்கள் என்னை மதிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் நடக்கவில்லை' என, அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த வரிசையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புதிதாக இணைந்துள்ளது. வி.சி., பாணியில் தி.மு.க., அரசை விமர்சிக்க துவங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 24ல், ஈ.வெ.ரா., நினைவு நாளில், அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், 'தமிழகத்தில் அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, ஈ.வெ.ரா., வழிவந்த திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்கின்றன.
'ஆனாலும், இந்தியாவிலேயே ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது' என்று, ஆட்சியை விமர்சித்தார்.
கண்டிப்பு
அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிரசாரம் செய்வது, போராட்டம் நடத்துவது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகள்.
ஆனால், தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தெருமுனை கூட்டம் என, எல்லாவற்றுக்கும் அனுமதி தருவதில் காவல் துறை இழுத்தடிக்கிறது. தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கைது என காவல் துறை நடந்துகொள்வது சரியானதல்ல என, கண்டித்துள்ளார்.
கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த விமர்சனம், தமிழக அரசியல் அரங்கில் பேசு பொருளாகி, தி.மு.க.,வுக்கு சங்கடத்தை ஏற்படுத்திஉள்ளது. நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக கடுமையான நீண்ட பேட்டி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கம்யூனிஸ்ட் என்றாலே அரசின் குறைகளை பேசுவது, போராட்டம் நடத்துவது தான். அதை செய்யாவிட்டால், நாங்கள் கட்சியையே நடத்த முடியாது. சி.ஐ.டி.யு., மற்றும் விவசாய சங்கங்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும்போது, கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிஇருக்கிறது. அதனால் தான், தி.மு.க., அரசை குறிப்பாக காவல் துறையின் நடவடிக்கைகளை, பாலகிருஷ்ணன் விமர்சித்து வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளிகள் நிர்வாகத்தில் எக்கச்சக்க குளறுபடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:'அடுத்த கல்வியாண்டில், 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை, அருகில் உள்ள தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதன் நோக்கம், படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார் மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை, மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும்.அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்டால், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில், 58,000க்கும் அதிகமான பள்ளிகள் உள்ளன; அரசு பள்ளிகள், 37,579; அரசு உதவி பெறும் பள்ளிகள் 8,328. இவற்றில், 46 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.ஆனால், குறைந்த அளவு இயங்கும், 12,000 தனியார் பள்ளிகளில், 65 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட, தனியார் பள்ளிகளில் அதிகம் பணிபுரிகின்றனர்.
அரசு பள்ளிகள் 2,500ல் கழிப்பறை வசதி இல்லை என, ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரம்பப் பள்ளிகள் இடைநிற்றல் 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சூழ்நிலையில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்து கொடுக்க முனைவது, ஏழை, உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்விஉரிமையை பறிக்கும் செயலாகும்.
பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. அரசுப் பள்ளிகளுக்கு செலவிடாமல், தமிழக அரசு அதிலிருந்து தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி, தனியாருக்கு தத்துக் கொடுப்பது, முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.
அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 500 பள்ளிகளை தத்து கொடுக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். ஆசிரியர் காலியிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.