பிரித்தானியாவில் புலம்பெயர்தல் தொடர்பில் அறிமுகம் புதிய சட்டங்கள்
2 தை 2025 வியாழன் 14:54 | பார்வைகள் : 1188
பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோரை கடத்தும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அறிமுகம் செய்ய பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும், புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் கடத்துபவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது.
அதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் கடத்துபவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு பயணத் தடை, சமூக ஊடகத் தடை மற்றும் மொபைல் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் முதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
ஆட்கடத்தல் கும்பல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருக்கு குறிப்பாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வலிமையான அதிகாரம் அளிக்கப்படும் என பிரித்தானிய உள்துறை அமைச்சரான Yvette Cooper தெரிவித்துள்ளார்.
தற்போது இத்தகைய குற்றங்களுக்கு எதிராக தடுப்பு ஆணைகள் பெறுவது கடினமான மற்றும் நீண்ட செயல்முறையாக உள்ளது. புதிய சட்டங்கள் அவற்றை வேகமாக செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.