மாணவி விவகாரம்: விசாரணையில் நேர்மை வேண்டும்
3 தை 2025 வெள்ளி 05:14 | பார்வைகள் : 590
அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையில், நேர்மை வேண்டும்,'' என, ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன், திடீரென குரல் எழுப்பியிருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
குற்றச்சாட்டு
இச்சம்பவம் தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதை மறைக்க அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன், சம்பவம் குறித்து விசாரிக்க, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்ற சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்த குழுவினரும் நேற்று விசாரணையை துவக்கி உள்ளனர்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களும் சென்னை வந்து விசாரித்து சென்றுள்ளனர். விரைவில், மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த, தமிழக அரசு அனுமதி மறுத்து வருகிறது. தடையை மீறி போராட்டம் நடத்துவோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் அரசுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இந்த வழக்கில் நேர்மையான விசாரணை வேண்டும் என, தி.மு.க., கூட்டணி கட்சியான வி.சி., தலைவர் திருமாவளவன் திடீரென குரல் கொடுத்துள்ளார். இது, ஆளும் தி.மு.க.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில், நேற்று திருமாவளவன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வரும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, அரசுக்கு சுட்டிக்காட்டி வருகிறோம்.
கூடுதல் கவ னம்
அண்ணா பல்கலையில், மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அதில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டு இருந்தாலும், அந்த குற்றச்செயல் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது.
எனவே, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவியருக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதில், தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி, ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
எனவே, தமிழக அரசும், குறிப்பாக காவல் துறையும் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.
தற்போது கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக ஜாமின் வழங்கக்கூடாது; அவரை சிறையில் வைத்தபடியே புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
'யார் அந்த சார்?' என்ற சந்தேகம் இருப்பதால்தான், நேர்மையான புலன் விசாரணை தேவை என்கிறோம்.அரசு தரப்பில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். எதிர்க்கட்சிகள் போராடுவதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே, எங்களின் வேண்டுகோள்.இவ்வாறு அவர் கூறினார்.