மாணவி விவகாரம்: மதுரையில் இருந்து சென்னை வரை இன்று பா.ஜ., நீதி பேரணி துவக்கம்
3 தை 2025 வெள்ளி 05:16 | பார்வைகள் : 392
பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து இன்று (ஜன.,03) நீதி கேட்பு பேரணி துவங்க உள்ளது. சென்னை வரை பேரணி நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஜன.,03) மதுரை செல்லாத்தம்மன் கோவிலில் இருந்து சென்னை வரை பா.ஜ., சார்பில் நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.,வின் நீதி கேட்பு பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் மதுரையில் இருந்து பா.ஜ., பேரணி உறுதியாக துவங்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று (ஜன.,03) பா.ஜ., மாநில மகளிரணி தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து நீதி கேட்பு பேரணி துவங்க உள்ளது. சென்னை வரை பேரணி நடைபெற உள்ளது.
மகளிர் அணியினர் கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து புகார் மனு அளிக்க உள்ளனர். இதற்கிடையே பேரணியில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த, பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.