Paristamil Navigation Paristamil advert login

லாட்டரி மன்னன் மார்ட்டின் ஆண்டு வருவாய் ரூ.15 ஆயிரம் கோடி: அமலாக்கத்துறை அதிர்ச்சி

லாட்டரி மன்னன் மார்ட்டின் ஆண்டு வருவாய் ரூ.15 ஆயிரம் கோடி: அமலாக்கத்துறை அதிர்ச்சி

3 தை 2025 வெள்ளி 05:22 | பார்வைகள் : 539


லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த மார்ட்டின், தனது லாட்டரி வியாபாரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதாக, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் சான்டியாகோ மார்ட்டின். இவர் தனது லாட்டரி தொழிலில் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

மார்ட்டின் லாட்டரி தொழிலில் சட்டவிரோதமான வழிகளை பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்கள் என கண்டறியப்பட்ட 622 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொச்சி மண்டல அமலாக்கத் துறையினரும், 409 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொல்கத்தா மண்டல அமலாக்கத் துறையினரும் பறிமுதல் செய்துள்ளனர்.

அமலாக்கத் துறையின் விசாரணையானது, 2014ம் ஆண்டு சி.பி.ஐ .,பதிவு செய்த ஒரு வழக்கு, 2022ம் ஆண்டு கொல்கத்தா போலீஸ் பதிவு செய்த இரு வழக்குகள், 2024ம் ஆண்டு மேகாலயா அரசு பதிவு செய்த ஒரு வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில் ஆனது.மேகாலயா அரசு பதிவு செய்த வழக்கில், சட்டவிரோதமாக மார்ட்டின் லாட்டரி விற்பனை செய்ததன் மூலம் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சமீபத்தில் மார்ட்டின் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத 12 கோடி ரூபாய் ரொக்கம், 6.4 கோடி மதிப்புள்ள டிபாசிட் கைப்பற்றப்பட்டது. கோவை, சென்னை, மும்பை, துபாய், லண்டன் ஆகிய இடங்களில் சொத்துக்களும், பங்குச்சந்தை முதலீடுகளும் கண்டறியப்பட்டன.

மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனம், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எக்கச்சக்கமாக நிதி வழங்கி பிரபலமானது. இந்த நிறுவனம் 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு 1368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.

மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்ற மொத்த நிதி 1592 கோடி ரூபாயில், மார்ட்டின் நிறுவனம் மட்டுமே 542 கோடி நிதி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தி.மு.க.,வுக்கு 503 கோடி ரூபாய், பாஜ கட்சிக்கு 100 கோடி ரூபாய், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கு 154 கோடி ரூபாய், காங்கிரஸ் கட்சிக்கு 50 கோடி ரூபாய் மார்ட்டின் நிறுவனம் நன்கொடை வழங்கியுள்ளது.

தி.மு.க., தேர்தல் பத்திர நன்கொடையாக பெற்ற 632 கோடி ரூபாயில், மார்ட்டின் நிறுவனம் மட்டுமே 503 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன சொத்துக்களை வாங்கி குவிப்பதற்காகவே, 350 கம்பெனிகளையும், ஸ்பெஷல் பர்பஸ் வெகிக்கிள் நிறுவனங்களையும் மார்ட்டின் தொடங்கியுள்ளார்.

லாட்டரி விற்பனையில் பலவிதமான முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது நண்பர்களும், உறவினர்களும் லாட்டரி விநியோகஸ்தர்கள் ஆக நியமிக்கப்பட்டதும், அவர்கள் பரிசுக்குரிய லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யாமல் தாங்களே வைத்துக் கொண்டதும், கடைசியில் பரிசுத் தொகையை பெற்றதும் தெரியவந்துள்ளது.

விற்பனை செய்யாத லாட்டரி சீட்டுகள் சட்டப்படி அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் முறைகேடு செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அமலாக்கத்துறை பறிமுதல் செய்த இரண்டு சொத்துக்களை விற்பனை செய்ததும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது.

ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் டர்ன் ஓவர் இருந்தாலும் மார்ட்டின் நிறுவனம் மிகக்குறைந்த லாபத்தையே கணக்கு காட்டி உள்ளது. இந்த நிறுவனம் சிக்கிம் லாட்டரி தான் பிரதானமாக விற்கிறது. பெரும் தொகை சம்பாதித்த போதும் சிக்கிம் மாநில அரசுக்கு 2014ம் ஆண்டு வரை வருவாய் பகிர்வாக 8 முதல் 10 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.