பிரான்சில் (prison d'Arles) சிறைச்சாலையில் பணையக் கைதிகள் ஐவரும் விடுவிப்பு.
3 தை 2025 வெள்ளி 16:48 | பார்வைகள் : 1472
இன்று பிரான்சில் d'Arles சிறைச்சாலையில் கைதி ஒருவர் அங்கு கடமையில் இருந்த நான்கு மருத்துவ தாதிகள், ஒரு காவலர் உட்பட ஐந்து பேரை பணையக் கைதிகளாக தடுத்து வைத்திருந்தார். சிறைச்சாலையில் தயாரிக்கப்பட்ட அல்லது வெளியில் இருந்து உறவினர்களால் கொண்டுவரப்பட்ட ஆயுதத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட ஐந்து பேரையும் அவர் தன் வசம் பணையக் கைதிகளாக வைத்திருந்தார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட கைதியோடு 5 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தானாகவே வந்து அவர் சரணடைந்துள்ளார். எந்த காயங்களும் இன்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரான்ஸினுடைய நீதி அமைச்சர் Gérald Darmanin சிறைச்சாலை வட்டாரத்திற்கு நன்றி தெரிவித்தார்.
குறித்த 37 வயதான கைதி 2031ஆண்டில் சிறையில் இருந்து விடுவிக்க தகுதியுடையவர் என்றும் , அவர் மனநலப் பிரச்சினைகளுக்கு உள்ளானவர் என்றும், தெரிவித்துள்ள சிறைச்சாலை வட்டாரம், அவர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றச் செயலுக்காக சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறித்த எந்த கோப்பிலும் அதற்கான சான்றுகள் இல்லை என்றும் சிறைச்சாலை வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.