Paristamil Navigation Paristamil advert login

மதுரையில் ஊர்வலம் புறப்பட்ட குஷ்பு கைது

மதுரையில் ஊர்வலம் புறப்பட்ட குஷ்பு கைது

4 தை 2025 சனி 03:23 | பார்வைகள் : 720


 பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு, தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணியாக புறப்பட்ட, நடிகை குஷ்பு உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்து, ஆட்டு கொட்டகையில் அடைத்தனர்.

அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியதுடன், அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், தமிழக பா.ஜ., மகளிர் அணி சார்பில், மதுரையில் இருந்து சென்னைக்கு, நீதி கேட்டு பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பேரணி முடிவில், கவர்னரிடம் மனு அளிக்கப்படும் என்றும், அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

போலீசார் அனுமதி மறுத்த நிலையில், திட்டமிட்டபடி பேரணி துவங்கும் என, பா.ஜ., அறிவித்தது. நேற்று காலை, பா.ஜ.,வை சேர்ந்த நடிகை குஷ்பு, மாநில பா.ஜ., மகளிர் அணி தலைவி உமாரதி மற்றும் நிர்வாகிகள், மதுரை, சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் அருகே திரண்டனர். பேரணி செல்ல முயன்ற, குஷ்பு உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

போலீசார் கைது செய்வதற்கு முன், குஷ்பு பேசியதாவது:

இங்கு வந்துள்ள கூட்டம், தி.மு.க.,வினர் பிரியாணி கொடுத்து அழைத்து வருவது போன்றது கிடையாது. நீதிக்காக போராடும் கூட்டம். பெண் குழந்தை வைத்துள்ள அனைவரும், அண்ணா பல்கலை மாணவிக்கு பிரச்னை ஏற்பட்டதால், தெருவுக்கு வந்து போராடுகின்றனர். இது பா.ஜ., பிரச்னை மட்டும் கிடையாது. தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரின் பிரச்னை.

தி.மு.க.,வினர் விளம்பரம் தேடுவதாக கூறுகின்றனர். விளம்பரம் தேவைப்படுவது அவர்களுக்கு தான். கையில் காகிதம் வைத்து படிக்கும் முதல்வருக்கு, பெண்களை காப்பாற்ற வக்கில்லை. பெண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என கற்றுக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு சுயமரியாதை சொல்லிக் கொடுத்தவர் கருணாநிதி. அவர் குடும்பத்தில் இருந்து வந்தவரா நீங்கள்; நான்கு ஆண்டுகளில் என்ன செய்துள்ளீர்கள்?

ஊழலுக்கு பெயர் போன கட்சி தி.மு.க., நீங்கள் மற்றவர்களை பார்த்து ஊழல் என, பேசக்கூடாது. ஒரு பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தால், முதல்வரான நீங்கள் பார்த்தும், பார்க்காததும் மாதிரி போகிறீர்கள்.

யார் அந்த சார்?

இப்பிரச்னை வந்தபோது போலீசார், 'ஒரு சார் சொன்னாரு. அதனால் தான் அந்த ஞானசேகரனை விட்டு வைக்க வேண்டியதாக இருந்தது' என்றனர். யார் அந்த சார்... இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?

இன்று பள்ளிக்கூடம் வாசலிலேயே போதைப் பொருட்களை விற்கின்றனர். தமிழகத்தில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வரை, நீங்கள் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்கும் வரை, நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும். அது கிடைக்கும் வரை போராடுவோம். இது இந்த மண் மீது சத்தியம்; கண்ணகி மேல சத்தியம்.

தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிக்கு சமம். முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, இது வெறும் ஆரம்பமே; மேலும் தொடரும். நீங்கள் போலீசை வைத்து கைது செய்தாலும், தெருவுக்கு வருவோம். 'நாரி சக்தி' என பிரதமர் கூறுவார். அந்த நாரி சக்தி என்னவென்று காண்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


மாநில மகளிர் பிரிவு தலைவி உமாரதி பேசியதாவது:


நேற்று முன்தினம் இரவு முதல், மகளிர் அணியினரை வீடு வீடாக கைது செய்கின்றனர். இதற்காக போலீசாருக்கு நன்றி. பா.ஜ.,வை பார்த்து அரசு பயந்து போய் இருக்கிறது. இது கண்ணகி நீதி கேட்ட இடம். எங்களை அடக்கினீர்கள் என்றால், பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவோம். நாங்கள் பேரணி சென்றால், 2026ல் ஆட்சி மாற்றம் வந்து விடும் என்று பயமா?

பெண்களுக்காக தன்னை சாட்டையால் அடித்துக் கொண்ட ஒரு தலைவர், முதல்வராக வந்து விடுவார் என்று பயம் உள்ளதா?

தமிழகத்தில் பிரச்னை என்றால் மணிப்பூரை பார்; பா.ஜ.. ஆளும் மாநிலங்களை பார் என்கிறீர்கள். முதலில் உங்கள் வீட்டுப் பிரச்னையை தீர்த்து விட்டு மற்ற இடங்களை பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.