மாணவி விவகாரத்தில் உண்மையை தி.மு.க, அரசு மறைக்கிறது: அண்ணாமலை
4 தை 2025 சனி 03:25 | பார்வைகள் : 753
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், மேற்குவங்கம் கோல்கட்டாவில் ஆர்.ஜி., கார் மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமையை போன்று இரு சம்பவங்களும் இடையே உள்ள ஒற்றுமையை காட்டுகிறது என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ரிபப்ளிக் செய்தி சேனலுக்கு அண்ணாமலை அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு மீது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் அச்சம்பவம் மேற்குவங்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதே போன்றதொரு கொடூரமான சம்பவம் நடந்திருப்பது, அங்கு நடந்தது போன்றே இங்கும் அரசியல் கட்சியின் தலையீடு மற்றும் ஆளும் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிப்பது என இரு சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை காட்டுகிறது.
மேலும் குற்ற சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, பா.ஜ., மகளிரணியினர் நேற்று (ஜன.03) காலை மதுரையில் இருந்து சென்னை வரை பேரணி தொடங்கியபோது பா.ஜ., மகளிர் அணியினரை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.
இந்த விவகாரத்தில் ஆளும் தி.மு.க, அரசு உண்மையை மறைக்க' முயற்சிக்கிறது. சென்னையில் நடைபெறும் பேரணி முடிந்ததும், மகளிர் அணி சார்பில் கோரிக்கைகளை குறித்து கவர்னரிடம் மனு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.