மணிப்பூரில் மீண்டும் வெடித்தது கலவரம்! எஸ்.பி., அலுவலகம் மீது தாக்குதல்
4 தை 2025 சனி 03:30 | பார்வைகள் : 789
மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்து அங்கு வசிக்கும் மெய்தி, குக்கி இன மக்கள் இடையே இனக்கலவரம் நிகழ்ந்து வருகிறது. வன்முறை நிகழ்வுகள் எதிரொலியாக கிட்டத்தட்ட 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எண்ணிலடங்கா பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
அண்மையில், நிருபர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் பைரன் சிங், மணிப்பூர் மாநில நிகழ்வுகளை சுட்டிக்காட்டி தாம் மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். அவரின் மன்னிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் மூண்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. தாக்குதலில் இறங்கியது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் என்று கூறப்படுகிறது. மத்திய பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், கல்வீச்சிலும் இறங்கினர்.
மாவட்ட எஸ்.பி., அலுவலகம் மீது அவர்கள் கற்களை வீசி தாக்கியதில் அங்கு பணியில் இருந்த பலர் காயம் அடைந்தனர். உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன.
திடீர் தாக்குதலில் எஸ்.பி., மனோஜ் பிரபாகர், காயம் அடைந்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த அதே தருணத்தில் அங்குள்ள தெருக்களில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் பலர் நடமாடியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பல பகுதிகளில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.