லடாக்கில் இரண்டு புதிய மாவட்டங்கள்? எல்லையில் மீண்டும் வாலாட்டும் சீனா!
4 தை 2025 சனி 03:32 | பார்வைகள் : 854
லடாக் எல்லையில், சீனா அறிவித்துள்ள இரண்டு புதிய மாவட்டங்கள் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதாக நம் வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லடாக் மற்றும் திபெத் எல்லையில், வடமேற்கு சீனாவுக்கு உட்பட்ட ஜின்ஜியாங் உய்குர் என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதி அமைந்துள்ளது.
இங்குள்ள ஹோட்டன் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் ஹீயான் மற்றும் ஹீகாங் என்ற இரண்டு புதிய மாவட்டங்களை சீனா அறிவித்துள்ளது.
இந்த புதிய மாவட்ட அறிவிப்புக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மற்றும் மாநில கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக, சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா நாளிதழில் கடந்த மாதம் 27ல் செய்தி வெளியானது.
சீனாவின் இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரங்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
சீனா அறிவித்துள்ள இரண்டு புதிய மாவட்டங்கள், லடாக் பகுதிக்குள் வருகின்றன. சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவல்களை, நாம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
புதிய மாவட்டங்களை அறிவிப்பது, அப்பகுதியின் மீதான நம் இறையாண்மை தொடர்பான நிலைப்பாட்டை பாதிக்காது. சீனாவின் சட்டவிரோத மற்றும் பலவந்தமான ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்கிடையாது. இது குறித்து நம் எதிர்ப்பை துாதரக அளவில் வெளிப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திபெத்தில் ஓடும் யார்லுங் சாங்போ ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டப்போவதாக, சீனா ஏற்கனவே அறிவித்தது. இந்த ஆறு, நம் நாட்டில் பிரம்மபுத்ரா நதியாக ஓடுகிறது.
இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், புதிய மாவட்டத்தை அறிவித்து சீனா மீண்டும் வாலாட்ட துவங்கியுள்ளது.