Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் பரவும் புதிய வைரஸ் - இலங்கை பேராசிரியர் விளக்கம்

சீனாவில் பரவும் புதிய வைரஸ் - இலங்கை பேராசிரியர் விளக்கம்

4 தை 2025 சனி 09:03 | பார்வைகள் : 496


சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் ஒன்று அதிவேகமாக பரவி வருவது தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதால்  இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

கொரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுத்துவதாகவும் புதிய வைரஸால் சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் சீனத் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன சமூக வலைதளங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் புதிய வைரஸ் குறித்து சீன அரசோ, உலக சுகாதார அமைப்போ அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் சீனாவின் சில பகுதிகளில் நிமோனியா பரவி வருவதாக அந்த நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் (சிடிசி) தெரிவித்திருக்கிறது.

“கடந்த குளிர்காலத்தை ஒப்பிடும்போது இந்த குளிர்காலத்தில் நுரையீரல் தொடர்பான வைரஸ் பரவல் குறைவாகவே இருக்கிறது. தற்போது பரவும் வைரஸால் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பரவல் சற்று அதிகமாக உள்ளது” என சீன வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

எச்எம்பிவி எனப்படும் இந்த வைரஸுக்கு மருந்துகள் இல்லை. பொதுவான சிகிச்சை மட்டுமே அளிக்க முடியும். வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதே சிறந்தது. எச்எம்பிவி வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. இது சாதாரண வைரஸ் தொற்றுதான். சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த வைரஸ் பரவல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, சீனாவில் ஒரு புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறது.

குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்றுகள் பொதுவானவை. எச்சரிக்கை விடும் அளவில் இதுவொரு ஆபத்தமான வைரஸ் பரவல் அல்ல.

எச்எம்பிவி சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கு உந்துதலாக இருந்தாலும், இது ஒரு புதிய வைரஸோ அல்லது தொற்றுநோய் அச்சுறுத்தலோ அல்ல.

இந்த வைரஸ் பரவல் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். ஆனால், சிறு குழந்தைகள், முதியவர்கள் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால், தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் எனக் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்