ரசிகர்களை ஏமாற்றிய ‘விடாமுயற்சி’….
4 தை 2025 சனி 11:03 | பார்வைகள் : 232
அஜித் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்திருந்தாலும் இரண்டு வருடங்களாக அஜித்தின் படங்கள் எதுவும் வெளிவராதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. அதாவது துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்தார்.
அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்தார். இதில் விடாமுயற்சி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தது.
எனவே 2025 பொங்கலை தல பொங்கலாக கொண்டாட தயாராகி வந்தார்கள் ரசிகர்கள். ஆனால் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஆரம்பத்திலேயே 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்புடன் தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படமும் 2025 கோடைக்கு தள்ளிப்போனது.
இவ்வாறு அஜித்தின் இரண்டு படங்களுமே கடந்த ஆண்டில் வெளியாகாதது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தந்துள்ளது.இருப்பினும் நடிகர் அஜித்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டிருப்பதாகவும் இப்படத்தின் டிரைலர் ரெடியாகிவிட்டதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிடுகிறது.
இந்நிலையில் தான் இந்த படத்தை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.