பெஞ்சல் பாதிப்புகளுக்கு பேரிடர் முத்திரை வழங்கியது அரசு
5 தை 2025 ஞாயிறு 05:13 | பார்வைகள் : 702
தமிழகத்தின் 'வடமாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய, 'பெஞ்சல்' புயலை, தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. நிவாரண செலவுகளுக்கு எந்த தடங்கலும் இருக்காது என்பதால், இந்த முத்திரை குத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கக்கடலில் கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் உருவான, 'பெஞ்சல்' புயல், 30ம் தேதி புதுச்சேரி, மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்தது.
மரங்கள் சாய்ந்தன
இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பெஞ்சல் புயலால் கனமழை பெய்தது.
திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில் 51 செ.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரம் வெள்ளத்தில் மிதந்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடாமல் கொட்டிய மழையால், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
பல இடங்களில் 4 அடி வரை தண்ணீர் தேங்கியதால் வீடுகள், விளைநிலங்கள் மூழ்கி சேதமடைந்தன.
மீட்பு, நிவாரணப் பணிகளில், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும், துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
டிசம்பர் 1ம் தேதி தென்பெண்ணையாற்றில், 1.70 லட்சம் கன அடி வரை தண்ணீர் சென்றதால், ஆற்றின் கரையோரம் இருந்த கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர்.
எவ்வித முன்னெச்சரிக்கையும் விடுக்காமல், சாத்தனுார் அணையிலிருந்து நள்ளிரவில், 1.70 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதே பெரும் பாதிப்புக்குக் காரணம் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
ரூ.2,475 கோடி தேவை
பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், டிசம்பர் 3ம் தேதி, தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், 'உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா, 5 லட்சம் ரூபாய், பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு 17,000 ரூபாய் முதல் 22,500 ரூபாய், மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8,500 ரூபாய், இறந்த மாடுகளுக்கு தலா, 37,500 ரூபாய், ஆடுகளுக்கு 4,000 ரூபாய், கோழிகளுக்கு 100 ரூபாய், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷனில், 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்' என அறிவித்தார்.
புயல் பாதிப்பு தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், 'பெஞ்சல் புயலால் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி பேரும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு, 2,475 கோடி ரூபாய் தேவை' என்று கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழு நேரில் ஆய்வு நடத்தியது. அதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு உதவும் வகையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு, 944.80 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.
இந்நிலையில், தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை, பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கைப் பேரிடராக அறிவித்துஉள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதனால், சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சீரமைப்பு பணிகளுக்கு பேரிடர் நிதியுடன், அரசின் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும்.
அதற்காகவே, பெஞ்சல் புயல் தீவிரமான இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.